Wednesday, May 21, 2014

Vishnu - சத்குவே ரங்காநாதா !

கூர்விழிக் கன்னியரின் காமத்தில் கட்டுண்டு
கண்ணா உன் பரம பாவன
பேர்சொல்லிப் பாடாது புல்லினும் கடையனாய்
பரிதவிகின்றேன் நான்
நேர்வழி நான்மறந்தேன் நீயென்னை மறவாது
நேசமுடன் ஆட்கொள்ளுவாய்
ஸ்ரீரங்க மிருந்தே பாரெல்லாம் அருள்செய்யும்
சத்குருவே ரங்கநாதா

ஈரடியில் அன்றுநீ உலகினையே அளந்தாய்
இன்றெனைக் காத்தலரிதோ?
சீறித் தூண்பிளந்து சிறுவனின் சொல்காத்தாய்
சிறியன்எனைக் காத்தலரிதோ?
பாரதப் போர்முடித்து தர்மத்தைக் காத்தாய்
பாவிஎனைக் காத்தலரிதோ?
ஸ்ரீரங்க மிருந்தே பாரெங்கும் அருள்புரியும்
சத்குருவே ரங்கா நாதா !

ஆதவர்கள் குலவிளக்கே அரக்கர்கள் குலமழித்து
அறவழியை நிலை நாட்டினாய்
ஒருவனுக்கு ஒருத்தியென அன்னையை கைப்பிடித்து
உலகிற்கு வழி காட்டினாய்
சோதனை போதுமய்யா செங்கமலத் தாள்பணிந்தேன்
சிறியவனைக் காத்தருளுவாய்
ஸ்ரீரங்க மிருந்தே பாரெங்கும் காத்தருளும்
சத்குருவே ரங்கநாதா

பாயும் புலிமுன்னர் புள்ளிமான் நிற்குமோ?
பறவையும் வலையினின்று மீளுமோ?
பாசவலைசிக்கி பரிதவிக்கும் என்மீதுன்
பாதநிழல் படவொண்ணாதோ?
சேயல்லவோ நான் தாயல்லவோ நீ
சற்றேனும் யோசிக்கலாமோ ?
ஸ்ரீரங்க மிருந்தே பாரெங்கும் அருளும்
சத்குருவே ரங்கநாதா!

பொய்யன் இவனென்று பேசுவோர் சொல்கேட்டு
பெற்றவனே மறந்திடலாமோ?
புன்னெறியே உருவான பேயனே என்றாலும்
பிள்ளைஎனைத் துறந்திடலாமோ?
துய்யத் தூமணியே தாமரைப் பாதமென்
சிரம்வைத்து காத்தருளுவாய் !
திருவரங்க மிருந்தே பாரெங்கும் அருள்புரியும்
சத்குருவே ரங்க நாதா!

அறவழியில் பயணிக்க எத்தனை இடர்பாடு!
அயர்கிறது எந்தன் உள்ளம்.
ஒருபுறம் பெண்ணாசை மறுபுறம் பொருளாசை
எங்கு நோக்கினும் பள்ளம்.
திருமகளும் தான்பிடித்த சரணார விந்தங்கள்
துணையாக எனக்கு நீ தா
ஸ்ரீரங்க மிருந்தே பாரெங்கும் அருள்புரியும்
சத்குருவே ரங்க நாதா!

அன்னையின் திருக்கரங்கள் அன்பாக வருடியதும்
ஈருலகம் அளந்தது மிதுவே !
ஆழ்வார்கள் செந்தமிழில் என்புருகப் பாடியதும்
அருமறைகள் தேடியது மிதுவே !
துன்பக் கடல்மூழ்கி தத்தளிக்கும் எனக்குந்தன்
திருவடிகள் நிழல் போதுமே !
ஸ்ரீரங்க மிருந்தே பாரெங்கும் அருள்புரியும்
சத்கு ருவே ரங்கா நாதா !


புரியவில்லை மறைமொழிகள் பாசுரங்கள் அறியவில்லை
பயனில்லா வாழ்வானது
பண்பான மனிதருடன் பழகியுமே திருந்தவில்லை
பறிதவித்த தெந்தன்மனது
தெரிந்தது உன்நாமம் தெளிந்தது என்னுள்ளம்
தேவையினி ஒன்றுமில்லை
ஸ்ரீரங்க மிருந்தே பாரெங்கும் அருள்புரியும்
சத்குருவே ரங்க நாதா

No comments:

Post a Comment