Wednesday, May 21, 2014

Shiva - தேவாரம் அறியேன்

தேவாரம் அறியேன் திருவடிகள் தரியேன்
நாவார ஐந்தெழுத்து நவிலாது  மாயப்
பூவையர் அல்குல் போதையில் அமிழ்ந்தேன்
ஆவேனோ போவேனோ அண்ணா மலையானே

நாக்கில்  நமச்சிவாயம் நல்வழிக்கு  வைக்காது
தீக்கிரை யாகுமித் தேகத்தை மோகித்தேன்
வாக்கிலும் நோக்கிலும் வந்துகுடி கொண்டெனைத்
தூக்கிவிடு வாயேஎன் அண்ணா மலையானே

வானமுது சுவைக்காது கூர்முலை பெண்டிர்வாய்
தேனமுதே பெரிதென்று திமிரிலே அலைகின்ற
ஈனப் பிறவியனை அன்புடனே ஆட்கொண்டு
ஞானம் நீதருவாயே அண்ணா மலையானே

பொட்டிட்டு  பூவைத்து மைவைத்துப் புன்சிரித்து
முட்டும்  முலைகொண்டு மேதினியில்  காண்பவரை
கட்டியே ஆளுகின்ற பெண்கள் இடத்தேவென்
இட்டம் களைவாய்நீ   அண்ணா மலையானே

படம்பார்த்து கதைபேசி பாதிநாள் கழித்திடுவேன்
விடமுண்ட கண்டனை வணங்கியே நால்வர்சொல்
படியென்றால் நேரம் இல்லாததுபோல் நடிப்பேன்
கடையனைக் காப்பதார் அண்ணா மலையானே

பிறப்பளித்தப் புண்ணியனின் பெயர் புகழ்தனை
மறந்திங்கு பெண்டிராம் மாயத்தில் சிக்குண்டு
இறந்து படவோ இங்கெனைப் படைத்திட்டாய்
ஒருபதில் சொல்லுநீ அண்ணா மலையானே

வேதங்கள்  அறிந்திட வேண்டும் ஐந்தெழுத்து
ஓதிட வேண்டும்நான் இருவரும் கண்டறியா
பாதம்தன் நிழலிலே பிறவி அறவேண்டும்
நாதனே சிவனேஎன் அண்ணா மலையானே


No comments:

Post a Comment