Sunday, September 28, 2014

Krishna - கோகுலத்தின் உயிர்நாடி

கோகுலத்தின் உயிர்நாடி கண்ணன் நீயடா - உந்தன்
கழுத்தில் உள்ள கௌஸ்துபமோ கன்னி நானடா

(கோகுலத்தின் உயிர்நாடி ...)

வேணுகானம் கேட்டு அங்கு பறவைகள் பாடும் அந்த
நாதத்தினைக் கேட்டு யமுனை நதியுமே ஓடும்
நானும் அந்த கானத்திலே என்னை மறந்தேன்  உன்
நறுமணக்கும் திருமேனி நினைவில் அமிழ்ந்தேன்

(கோகுலத்தின் உயிர்நாடி ...)

பசுக்கள்மீது உள்ள கருணை பாவைக் கில்லையா - எனைப்
பாசமுடன் அணைப்பதுமே உனக்குத் தொல்லையா
வசிக்க ஒரு இடமும் உந்தன் நெஞ்சில் தந்திடு - என்
யௌவனமும் உனக்குத் தந்தேன் கொள்ள வந்திடு

(கோகுலத்தின் உயிர்நாடி ...)

Thursday, September 18, 2014

General - தாயுமானவர்

உன்தமிழைப் படித்து வந்தேன் உன்னாலே தமிழ் அறிந்தேன்
குன்றாதத் தமிழின் சுவையில் கள்ளுண்ட வண்டு ஆனேன் (2)

(உன்தமிழைப் படித்து வந்தேன்)

மலர் அவிழ்த்த மணமாகி மனம் பரவும் உனது தமிழ்
இலக்கணங்கள் கற்றிடவே இது போலே ஏது தமிழ்

சைவ சமயமும் போற்றி வணங்கிடும்
தெய்வ புலவனே தமிழ்மகனே
தமிழின் அறிவோடு சிவனை கலந்திங்கு
அமுது போலூட்டும் திருவருளே

(உன்தமிழைப் படித்து வந்தேன்)

ஞானத்திலே ஊறியதோர் தேனடையோ உனது தமிழ்
சிவநெறியை ஊட்டிவிடும் கவிநெறியோ உனது தமிழ்

மதமும் கடந்திங்கு மனதில் அமர்ந்திட்ட
பதும நிதியாகும் உனது தமிழ்
தேடின் கிடைக்காத ஆடல் நாதனின்
பாதம் சேர்த்திடும் உனது தமிழ்

(உன்தமிழைப் படித்து வந்தேன்)


Wednesday, September 17, 2014

Sudarsana - அக்கரத்தின் சக்கரத்தை அருந் தமிழில் பாட வந்தேன்

அக்கரத்தின் சக்கரத்தை அருந் தமிழில் பாட வந்தேன்
இக்கடலின் எல்லை தாண்ட உன்னுதவி நாடி வந்தேன்

(அக்கரத்தின் சக்கரத்தை)

சுதர்சனமுன் பெயரைச் சொல்ல செல்வ மெலாம் குவிந்து விடும்
நிதமும் உன்னை நாம் நினைக்க நம்வினைகள் அகன்று விடும்

அண்ட பேரண்டம் அங்கு நிற்பது
உனது சுழற்சியால் என்றறிவேன்
மீண்டு மிங்குநான் வந்தி டாதபடி
வரங்கள் கேட்டுநான் வந்திடுவேன்

(அக்கரத்தின் சக்கரத்தை)

திரிபுரத்தை சிவனெரிக்க சூலத்தின் முனையிருந்தாய்
அறியாமை எனுமிருளை அகற்றிடவும் நீ வருவாய்

ஆறு கல்யாண குணங்களைத் தன்
அகத்தில் அடக்கிய சுதர்சனமே
சீறி ஒளிர்கின்ற தீயின் ஜ்வாலைகள்
அழகு சேர்ப்பதொரு நிதர்சனமே

(அக்கரத்தின் சக்கரத்தை)





Tuesday, September 16, 2014

Ganesh - Muzhumudhalai kaana vandhen

முழுமுதலைக் காண வந்தேன்
முதன் முதலாய் காண வந்தேன்
கொழுக்கட்டை உண்ணும் செல்ல
கணபதியைக் காண வந்தேன்

(முழுமுதலைக் காண வந்தேன்)

கந்தனுக்கு மூத்தவனாம்
குவலயத்தைக் காப்பவனாம்
வந்தவரின் குறையறிந்து
வரங்களினால் தீர்ப்பவனாம்

கண்ணதாசனின் கருத்தைக் கவர்ந்திட்ட
காவல் தெய்வமே கற்பகமே
கண்ணை கவர்கின்ற பிள்ளை யார்பட்டி
கோவில் கொண்டவென் கணபதியே

(முழுமுதலைக் காண வந்தேன்)

மலைக்குகையின் சுவற்றினிலே
செதுக்கியதோர் திருவுருவம்
வலம்புரியாய் தும்பிக்கை
வரங்கள் தரும் இரண்டு கரம்

அர்த்த பதுமத்தில் அமர்ந்து அருள்கின்ற
சித்தம் மேவிய சிவகுமரா
அத்தன் என்றுனை அண்டி வந்தவரை
அன்புடன் காக்கும் ஓங்காரா

(முழுமுதலைக் காண வந்தேன்)

Friday, July 4, 2014

Baba - கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை

கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை
கண்களில் தெரிந்தது சீரடி பாதை
உவகையில் குதிக்குது அடியவர்  மனது
இனியும் வருகின்ற நாட்களும் இனிது .

இராமன் என்பதும் அவனே இங்கு
சாயி ஆனவன் சிவனே ((2))

சாயி ராமனின் பாதம் பணிந்தால் துன்பங்கள் விலகும்
பாபா என்று பக்தியில் அழைத்தால் பாதையும் தெரியும் (2)

நமது பார்வையில் வெளிச்சம் சேர்த்து
தமது கையில்நம் கையினைக் கோர்த்து

சாயி காட்டுவான் பாதை - அவனது
சொற்கள் அனைத்துமே கீதை (2)

(கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை )

நினைவில் அவனை நிறுத்திடு அவனே நமக்கிங்கு சிவனாம்
அனுதினம் அவன்பெயர் சொல்லிடு அதுநீ செய்யும் தவமாம் (2)

மற்ற உயிருக்கு துன்பம் தராது
பற்றும் அறுந்தால் துயரம் வராது

இல்லை ஒன்றுமே தேவை - நம்மை
காத்து நிற்கும் அவன் பார்வை (2)

(கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை )

Based on the tune of Iravukku Pagalukkum iniyenna velai? song.

Thursday, July 3, 2014

Ramanuja - உடையவரை நானும் நாடி வந்தேன்

உடையவரை நானும் நாடி வந்தேன்
உடையவர்தான் என்று ஆகி நின்றேன்
பெரும்புத்தூர் தலத்தினுக்கு பெருமை சேர்த்தவன்
பாஷியத்தால் உலகினரை தன்பால் ஈர்த்தவன்

உடையவரை நானும் நாடி வந்தேன்
உடையவர்தான் என்று ஆகி நின்றேன்
வைணவமாம் மரத்தினுக்கு தண்ணீர் ஊற்றினான்
வைகுண்டம் செல்வதற்கு வழியைக் காட்டினான்

(உடையவரை நானும் நாடி வந்தேன் )

வேதாகமம் பாடும் அந்த நாரணன் பாயானான்
பாத மலர்பணிந்த எனக்கு அவனே தாயானான்
என் நெஞ்சில் நான் அவனை எண்ணி உருகா நாளில்லை
கண்களிலே அவன் உருவை வைத்து பார்க்கா பொழுதில்லை

கண்ணீர் அவன் துடைத்தான்
கவிதை அவன் கொடுத்தான் (2)

அவன் பாதத்தில் என் பாடல்கள்
என்றும் அர்ப்பணம் அர்ப்பணம் அர்ப்பணம்

(உடையவரை நானும் நாடி வந்தேன்)

மதில் மேல் ஒரு பூனை போல நானும் வாழ்ந்தேனே
முடியாத தோர் உலக சுகத்தில்  நானும் ஆழ்ந்தேனே

அவனாக எனைத்தேடி வந்து என்னை ஆண்டவன்
அவனின்றி குருவில்லை நானும் உறுதி பூண்டவன்

வழியை அவன் கொடுத்தான்
ஒளியும் அவன் கொடுத்தான் (2)

அவன் காட்டிய நல் பாதையில்
நானும் செல்லுவேன் செல்லுவேன் செல்லுவேன்

(உடையவரை நானும் நாடி வந்தேன்)

Monday, June 30, 2014

Baba - சீரடி கோவில் திருமணி ஓசை

செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று பாடல் மெட்டில் அமைந்தது


சீரடி கோவில் திருமணி ஓசை
காதில் விழுந்தது இன்று - நெஞ்சே
இன்றைய நாளும் நன்று

யாமிருக் கையிலே பயமிலை என்ற
வாக்கும் ஒலித்தது இன்று - நெஞ்சே
மங்கள நாளும் இன்று

திக்கற்று நானின்று தவித்திட்ட வேளை
ஓமென்ற ஒலி கேட்டது
அவன்குரலை செவி கேட்டது

சாயியவன் எந்தையவன்
தாயுமவன் தந்தையவன்

என் வாழ்வில் ஒளியேற்றினான்
எப்பொழுதும் காப்பாற்றுவான்

(சீரடி கோவில் திருமணி ஓசை)

கனிவான பார்வைகள் நமக்காக உண்டு
சிரம்மீது கரங்கள் உண்டு
கரம்மீது வரங்கள் உண்டு

தீனருக்கு உதவிடவே
பூமிதனில் அவதரித்தான்

நம் வாழ்வில் ஒளியேற்றினான்
எப்பொழுதும் காப்பாற்றுவான்

(சீரடி கோவில் திருமணி ஓசை)

Friday, June 27, 2014

Baba - சீரடிசெல்லும் பாதையிலே



சீரடிசெல்லும் பாதையிலே என் சிந்தையும் இருக்கிறது - அங்கு
ஆட்சி புரியும் அண்ணலைக் காண இதயமும் துடிக்கிறது

(சீரடிசெல்லும் பாதையிலே)

ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர்
சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார்
ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர்
சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார்
மானுடம் வாழ மண்மேல் வந்த மன்னவன் நகரல்லவா – அவர்
வாழ வைக்கும் காவல் தெய்வம் அன்னைக்கு நிகரல்லவா

(சீரடிசெல்லும் பாதையிலே)

என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ
என்னுடன் நிஜத்தில் இருப்பது போலே  நானும் நினைக்கின்றேன்
என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ
என்னுடன் நிஜத்தில் இருப்பது போலே  நானும் நினைக்கின்றேன்
சின்னவன் செய்த தவறுகள் பொறுத்து காத்திடவே வேண்டும் தினம்
நானும் உன்மேல் செந்தமிழ் பாடல் யாத்திடவே வேண்டும்

(சீரடிசெல்லும் பாதையிலே)

ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலின் மெட்டில் அமைந்தது.

Thursday, June 26, 2014

Baba - சீரடி என்னும் ஊரினிலே நம்

(காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல் மெட்டு)

சீரடி என்னும் ஊரினிலே நம்
சாயி பாபா இருக்கிறார்
தேடிவரும் தன் பக்தருக்கெல்லாம்
வரங்கள் தந்து மகிழ்கிறார்
வரங்கள் தந்து மகிழ்கிறார்

கதி இல்லாமல் வந்திடும் பேருக்கு
கட்டளை அவரும் தருகிறார்
கைவிரல் பிடித்து மையிருள் தன்னில்
கைவிரல் பிடித்து மையிருள் தன்னில்
கூடவே அவரும் வந்திடுவார்
கூடவே அவரும் வந்திடுவார்

(சீரடி என்னும் ஊரினிலே நம்  )

மறைகளை ஓதி பூஜைகள் செய்யும்
முறைகளுக் கவசியம் இல்லையே
இறைவனின் நாமம் ஒருமுறை சொல்ல
இறைவனின் நாமம் ஒருமுறை சொல்ல
அகலும் நமது தொல்லையே
அகலும் நமது தொல்லையே

வாட்டிடும் வறுமை விலகிட வேண்டி
தொழுவோம் நாமும் அவனடி
கேட்ட வரங்கள் கிடைத்திடும் நிச்சயம்
கேட்ட வரங்கள் கிடைத்திடும் நிச்சயம்
அதுதான் பாபா சன்னதி
அதுதான் சீரடி சன்னதி

(சீரடி என்னும் ஊரினிலே நம் )

Tuesday, June 24, 2014

Baba - சீரடியை நானும் நாடி வந்தேன்

(இனியவளே என்று பாடி வந்தேன் பாடல் மெட்டு)

சீரடியை நானும் நாடி வந்தேன்
சீரடிதான் என்று ஆகி நின்றேன்
தேடி வரும் அடியவரின் துயரம் தீர்ப்பவன்
நாடிடுவோர் இல்லங்களில் வளமை சேர்ப்பவன்

சீரடியை நானும் நாடி வந்தேன்
சீரடிதான் என்று ஆகி நின்றேன்
மன்னுயிரை தன்னுயிராய் என்றும் நினைப்பவன்
அன்னையென கரம்விரித்து நம்மை அணைப்பவன்

(சீரடியை நானும் நாடி வந்தேன்)

ஓராயிரம் பேரில் அவன் எனக்கே குருவானான்
பாடாத என் நாவில் வந்து பாட்டின் கருவானான்
அவன் பெயரில் நான் பாடும் பாட்டு என்றும் நன்மையே
அவனின்றி நானில்லை என்பதொன்றே உண்மையே

அவனால் தமிழ் அறிந்தேன்
அவனில் என்னை மறந்தேன் (2)

நெஞ்சீர்த்த்திடும் ஓர் பார்வையால்
என்னை வென்றவன் வென்றவன் வென்றவன்

(சீரடியை நானும் நாடி வந்தேன்)

பிடிவாதமா யிருந்த என்னை அவனும் கண்டானே
கடிவாளமும் போட்டு என்னை தன்னுள் கொண்டானே
அவன்தந்த இவ்வுயிரும் என்றும் அவனின் சொந்தமே
அவனின்றி எனக்கிந்த உலகில் இல்லை பந்தமே

அவனால் துயர் களைந்தேன்
அதனால் சுகம் அடைந்தேன் (2)

அவன் பாதங்கள் என் பாதையில்
என்றும் தோன்றுமே தோன்றுமே தோன்றுமே  VRI


Baba - சீரடியாம் திருத்தலம்தான் உன்னிடமோ

சீரடியாம் திருத்தலம்தான் உன்னிடமோ அது
தேடி வரும் அடியவர்க்கு பாற்கடலோ
பாடலொன்று நானெழுதி வந்திடுவேன் அதை
பாதத்தில் வைத்துசிரம் வணங்கிடுவேன்

(சீரடியாம் திருத்தலம்தான் )

வெறுங்கையுடன் அடியவர்கள் வந்திடுவார் அவர்
மனதினிலே சாயி தீபம் ஏற்றிடுவார்
அருளாலே அவர்கரங்கள்  நிறைத்திடுவாய் நீ
அலர்போலே அவர்நெஞ்சைப் பறித்திடுவாய்

(சீரடியாம் திருத்தலம்தான் )

பரிவுடனே திருத்திவிட்டாய் என்வழிகள் உன்
பக்தியிலே நனைந்ததெந்தன் இருவிழிகள்
அறிவுடனே பொருள்தந்து வாழ்வுதந்தாய் - உன்
அடியிணையில் என்சிரமும் தாழ்ந்திடுமே

(சீரடியாம் திருத்தலம்தான் )

வேறுபாதை போகின்ற அன்பருக்கும் அவர்
வாழ்வினிலே தீபமேற்றி ஒளிதருவாய்
பாரினிலே உனைப்போலே குருவில்லை நாம்
வேண்டும்வரம் தரும்கற்பக தருவில்லை


(சீரடியாம் திருத்தலம்தான் )

Vishnu - அலைமகள் நாயகனே

அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே
நிலையில்லா வாழ்வினிலே என்றும்
நின்னடி தான் புகலே
அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே

வேறார் எமை காக்க? இந்த
வினைக்கடல் மீட்டு கரை சேர்க்க
வேறார் எமை காக்க? இந்த
வினைக்கடல் மீட்டு கரை சேர்க்க
பாரா முகம் ஏனோ ?
பாரா முகம் ஏனோ ? உந்தன்
வாசலிலே நான் யாசித்தேன்
நிலையில்லா வாழ்வினிலே என்றும்
நின்னடி தான் புகலே
அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே

நித்தமும் உன்னையே தானறிவேன் - உனை
விட்டுவோர் தேவனை நானறியேன்
நித்தமும் உன்னையே தானறிவேன் - உனை
விட்டுவோர் தேவனை நானறியேன்
எத்தனை துன்பங்கள் வந்திடினும்
எத்தனை துன்பங்கள் வந்திடினும்- என்றும்
உன்பெயர் ஒன்றையே நானறிவேன்

அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே
நிலையில்லா வாழ்வினிலே என்றும்
நின்னடி தான் புகலே
அலைமகள் நாயகனே இங்கு
அருள் தரும் கார்முகிலே




Thursday, May 29, 2014

Ramanuja - ஸ்ரீ எத்திராஜனந் தாதிபாடினால்

ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்  மனதில் அமைதி மேவும் அதன்
எதுகை மோனைகள் இயைபு கற்றிட தமிழில் அறிவு கூடும்

அமுதனா ரோதிய உடையவர் பெருமைகள்
என்றுமே போற்றிட வேண்டிய உடமைகள்
தமிழெனும் கன்னியின் தலையலங் காரமே
தமிழருக் கிதுவென்றும் ஒருஅகங் காரமே

ஓதும் அன்பர்க்கு வேத ஞானங்கள் அருளும் எதிராசன் பாதமே
வேறு குருயாரும் தேட வேண்டாமே போது மிதுமட்டும் போதுமே
சூழும் வினைதீர வாழ வழிகாட்டும்
மோக்ஷ அருள் நெறியே

(ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்)

கானகம் சென்று அமர்ந்திட வேண்டாம்
கடுந்தவம் செய்து களைத்திட வேண்டாம்
வீணிலே அலைந்து வியர்த்திட வேண்டாம்
வெந்தழல் நெய்யென உருகிட வேண்டாம்

ஓதும் அன்பர்க்கு வேத ஞானங்கள் அருளும் எதிராசன் பாதமே
வேறு குருயாரும் தேட வேண்டாமே போது மிதுமட்டும் போதுமே
சூழும் வினைதீர வாழ வழிகாட்டும்
மோக்ஷ அருள் நெறியே

(ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்)

நானெனும் அகந்தை நமைவிட்டு நீங்கிடும்
நம்பெருமாள் மேல் நம்பிக்கை ஓங்கிடும்
ஓதிட தினமும் பாவங்கள் குறைந்திடும்
பாற்கடல் பாதை பார்வைக்குத் தெரிந்திடும்

ஓதும் அன்பர்க்கு வேத ஞானங்கள் அருளும் எதிராசன் பாதமே
வேறு குருயாரும் தேட வேண்டாமே போது மிதுமட்டும் போதுமே
சூழும் வினைதீர வாழ வழிகாட்டும்
மோக்ஷ அருள் நெறியே

ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்  மனதில் அமைதி மேவும் அதன்
எதுகை மோனைகள் இயைபு கற்றிட தமிழில் அறிவு கூடும்

Wednesday, May 28, 2014

Baba - சாயியெனும் தெய்வம்

சாயியெனும் தெய்வம் சீரடியில் நமக்கு
காவலென இருக்க கவலைகள் எதுக்கு?

(சாயியெனும் தெய்வம்)

குழந்தைகளை அன்னை காப்பதுபோல் நம்மை
காத்திடுவான் சாயி கணக்குக்கவன் தாயி 

(சாயியெனும் தெய்வம்)


அவனைவிட எளிய இறையொன்றும் இல்லை
தயவினுக்கு அவனே தரணியிலே எல்லை

(சாயியெனும் தெய்வம்)


நாடி வரும் நெஞ்சைத் தேடி வரும் ஜோதி
பாடி வரும் எனக்கும் அவன் தருவான் நீதி

(சாயியெனும் தெய்வம்)


Vishnu - ஞானத்தில் ஒளியினிலே

வழிகாட்டும் குருசொன்ன வழியில்நீரும் செல்கிலீர்
விதியிட்டுப் போகும்போக்கில் வீணிலே செல்லுவீர்
விழலுக்கிறைத்த நீராக வாழ்கை ஆகவேணுமோ?
வாசுதேவன் அடிபணிய விதியும்நமைச் சேருமோ?

Tuesday, May 27, 2014

Baba - சாயி நாமம் என்னும் அமிர்தம்

சாயி நாமம் என்னும் அமிர்தம் அருந்த
வாருங்கள் எனது தோழர்களே
சங்கடம் தீர்த்து சுகம் தரவல்லது
சாயி பாதைதான் தோழர்களே

பொருளின் மாயையில் எத்தனை நாட்கள்
புரியாதவராய் இருப்பீர்கள்?
மரணம் வந்திடும் வேளையில் அதுவும்
வந்திடும் என்றா நினைத்தீர்கள்?
உங்களின் இந்த தேடல்லில் எல்லாம்
ஒருபயன் இல்லை தோழர்களே
சங்கடம் தீர்த்து சுகம் தரவல்லது
சாயி பாதைதான் தோழர்களே

(சாயி நாமம் என்னும் அமிர்தம்)

மதத்தின் பெயரால் போராட்டங்கள்
எத்தனை நாள்தான் செய்வீர்கள்?
இதம்தரும் பாதை சாயியின் பாதை
அதில்பய ணிப்போம் வாருங்கள்

உங்கள் மதமெது வாயினும் நீங்கள்
இவனை நம்புங்கள் தோழர்களே
சங்கடம் தீர்த்து சுகம் தரவல்லது
சாயி பாதைதான் தோழர்களே

(சாயி நாமம் என்னும் அமிர்தம்)

Baba - साईं नाम का अमृत पीने चले आईये दोस्तों

साईं नाम का अमृत पीने चले आईये दोस्तों
संकट से हमें मुक्त कराये साईं नाम का रास्ता

दौलत के माया में डूबकर कब तक ऐसे रहिएगा
दुनिया छोड़कर जाते वकत क्या वह साथ में आयेगा
बे मतलब के हरकतें छोड़ दो दोस्ती का वास्ता
संकट से हमें मुक्त कराये साईं नाम का रास्ता

(साईं नाम का अमृत पीने )

मज़हब के आप नाम को लेकर ऐसा कब तक लडियेगा?
साई ने ऐसा मार्ग दिखाया उस पर क्यों न चलियेगा?
चाहे जिस मज़हब का हो तुम, कर लो इस पर आस्था
संकट से हमें मुक्त कराये साईं नाम का रास्ता

(साईं नाम का अमृत पीने )

Sunday, May 25, 2014

Baba - साई के चरणों में जो दिल आ गए

साई के चरणों में जो दिल आ गए
साई के चरणों में जो दिल आ गए
समझो उनके अब सुखद दिन आ गए
साई के चरणों में जो दिल आ गए

आये दिन अब ज़िन्दगी में जंग नहीं
आये दिन अब ज़िन्दगी में जंग नहीं
साईं के परिवार में हम मिल गए
साईं के परिवार में हम मिल गए
(समझो उनके )

साईं जैसा कौन मिलेगा मेरे जैसों को?
साईं जैसा कौन मिलेगा मेरे जैसों को?
वह मिले तो सारी दुनिया मिल गयी
वह मिले तो सारी दुनिया मिल गयी
(समझो उनके )

बीते जनम के कर्म से हम को मिले
बीते जनम के कर्म से हम को मिले
अब न उनका साथ छोड़ेंगे कभी
अब न उनका साथ छोड़ेंगे कभी
(समझो उनके )

Set to the tune of Dil ke armaan aansoon mein beh gaye 

Vishnu - ஞானத்தில் ஒளியினிலே

எனது எனதில்லாதது எல்லாமே இருதினங்களுக்கு
கனமில்லை நீர்மேல்பூத்த தாமரை மனங்களுக்கு

பழந்தின்ன குரங்குண்டு பணந்தின்ன உறவுண்டு
நிழல்கூட இரவினிலே நம்முடன் வருவதில்லை

உன்னிதழில் சிரிப்பிருந்தால் எல்லாரும் உறவுகள் தான் .
கண்ணீருக்குப் புகலிடம் கண்கள்கூட தருவதில்லை.

உலையேற்றிய பாத்திரத்தில் ஊற்றிவைத்த குளிர்ந்த நீர்
கரைந்து தான் போனதோ காற்று தான் ஆனதோ
அலைபாயும் நெஞ்சத்தை இறையிலேற்றி வைத்ததும்
அடங்கித்தான் போனதோ அமிழ்ந்து தான் போனதோ

எட்டெழுத்து மந்திரமே இறுதியென்று ணர்ந்தபின்
எட்டெழுத்து மந்திரமே உறுதியென்று ணர்ந்தபின்
எட்டெழுத்து மந்திரத்தைப் பற்றிநீயும் நின்றிட
எட்டெழுத்து மந்திரமும் சுற்றியுனை நிற்குமே

எட்டியிருந்து பார்க்கையில் ஒருதொலைவு தெரியுது
எட்டின்துணை கொண்டுவிட கிட்டமாகத் தெரியுது
எட்டியிருந்து பார்க்கையில் ஒருதொலைவு தெரியுது
எட்டியுள்ளே பார்க்கையில் கிட்டமாகத் தெரியுது

குற்றமுள்ள பிறவியைக் கொண்டாடும் மாந்தரே
எட்டெழுத்து மகிமையை எங்கனம்நீர் மறந்ததோ?
குற்றமுள்ள பிறவியைக் கடந்துகாண வாருமேன்
எட்டெழுத்து மகிமைநீர் உணர்ந்தோத வாருமேன்

எட்டெழுத்துக் குள்ளனைத்து ஆதியந்தம் அடங்கிடும்
முட்டவரும் மாடுகளும் மூச்சடைத்து ஒடுங்கிடும்
கெட்டியிருள் விலகியங்கு கதிரொளியும் துலங்கிடும்
சிற்றறிவும் விரிந்தெல்லாம் சட்டென்று விளங்கிடும்


Friday, May 23, 2014

General - ஏன் அழுதான்?

இலைகளினூடே சில்லறையாய்
இறைந்திருந்த வெய்யில்.
மரத்தின் நிழல்
மனதுக்கும் உடலுக்கும் இதம்.

காலையில் சாப்பிடாத வயிறு
கண்களைத் தாலாட்ட
வந்த கனவிலும் பசி.

ஏதோ ஒரு கை
(பார்த்தேயிராத அம்மாவுடையதோ?)
ஒரு கவளம் சோறு
ஊட்ட யத்தனித்தபோது
உதை விழுந்தது.

வலியில் துடித்து விழித்தன கண்கள்.

"மாட்டுக்குத் தண்ணி வக்காம
தூக்கம் என்னலே சவமே? த்தூ..."

மேலே வழிந்த எச்சிலில்
பன்னீர் புகையிலை வாசம்.

அழுக்குச் சட்டையால்
அவமானத்தைத் துடைத்துக் கொண்டு
மாட்டுக்குத் தண்ணி வைக்கையில்
அது சிரித்த மாதிரி இருந்தது.

திரும்ப யத்தனித்தக் கால்கள்
தனிமையை உணர்ந்து
தான் வாங்கிய உதையை
மாட்டுக்குத் தானம் செய்தது.

"சிரிப்பால சிரிச்ச?"

மாடு அழுதது.
எதற்கென்று தெரியாமல்
அவனும் அழுதான்.

Thursday, May 22, 2014

Baba - தீபம் எரியுது ஜோதி தெரியுது

தீபம் எரியுது ஜோதி தெரியுது
சாயியின் உருவமும் தெரிகிறது .
பாபம் களையும் நாத வடிவாம்
பாபா இருப்பதும் புரிகிறது

உன்பெயர் சொல்லி இனித்திடவே என்
இதழ்களும் இங்கே துடிக்கிறது
கண்ணீர்த் துளியால் கால்களைக் கழுவ
கண்களும் ஆசைப் படுகிறது

(தீபம் எரியுது ஜோதி தெரியுது )

உன்னை நினைத்து உருகிய உள்ளம்
போதும் போதும் என்கிறது
அன்னையின் செவியில் எந்தன் குரலும்
விழவில்லை யாவெனக் கேட்கிறது

(தீபம் எரியுது ஜோதி தெரியுது )

இதுவரை நானும் எனக்கென உன்னை
எதுவும் கேட்டது இல்லையடா
விதிமுடிந்தால் அது சீரடியில் எனும்
வரமொன்றை நீ தந்திடடா

(தீபம் எரியுது ஜோதி தெரியுது )

Wednesday, May 21, 2014

Vishnu - அரங்கனின் நாமம் மோக்ஷ பிரதானம்


அரங்கனின் நாமம் மோக்ஷ பிரதானம்
அதனை தினமும் செபித்திடுவோம்
இருவடிகளை நம் இதயத்தில் வைத்து
அனுதினமும் நாம் துதித்திடுவோம்

(அரங்கனின் நாமம்)

வீணில் தருக்கம் வாதங்கள் என்ற
வாழ்வை நாமும் மாற்றிடுவோம்
தூணைப்பிளந்து சிறுவனைக் காத்த
தேவனை நாம் போற்றிடுவோம்
தானேயான திருமேனியனின்
துணையை நாமும் கொண்டிடுவோம்
ஞானகுருவின் நிர்மல ரூபத்தை
நெஞ்சினிலே நாம் கண்டிடுவோம்

(அரங்கனின் நாமம்)

கண்கள் காணும் காட்சியில் எல்லாம்
கண்ணனை நாமும் கண்டிடுவோம்
எண்ணம் முழுவதும் அவனை நிறைத்து
அன்பு வழியில் சென்றிடுவோம்
மண்ணை விண்ணை அவன் அளந்தானே
மனதை அளப்பது காரியமா
திண்ணம் திண்ணம் அவனருள் இருந்தால்
தொடரும் பயணம் தைரியமாய்

(அரங்கனின் நாமம்)
x

Ramanuja - பெரும் புத்தூர் மன்னவா

 பெரும் புத்தூர் மன்னவா உன் 
பெருமைநான் சொல்லவா 
தானே உகந்த திரு மேனி 
கொண்டே இங்கு அருளே நீ 

பிறந்தாய் அமர்ந்தாய் மனதைக் கவர்ந்த

பெரும் புத்தூர் மன்னவா உன்
பெருமைநான் சொல்லவா 

நாவுரைக்க எந்தன் மனமுரைக்க 
நெகிழ்ந்து நெகிழ்ந்து அது தினமுரைக்க 
நோய்கள் மறைந்து உடல் சிலிர்த்திருக்கும் உனை 
நாடும் உயிர்கள் என்றும் சிரித்திருக்கும் 
வாழ்வின் இலக்குன் மலரடி தானே 

பெரும் புத்தூர் மன்னவா உன் 
பெருமைநான் சொல்லவா VRI

Vishnu - திருமாலின் சுபதரிசனம்

கையிலே சுதர்சனம் கண்டுதுள் ளுதுமனம்
திருமாலின் சுபதரிசனம்
மெய்யுருக மனதிலே மண்டிய இருளகல
பெருமாளின் சுபதரிசனம்
மெய்ஞான சோதியன் பாதங்கள் சேவிக்கும்
மகாலட்சுமி சுபதரிசனம்
பைந்நாகப் பாயான வைணவத்தின் தாயான
எதிராசன் சுபதரிசனம்

General - தாகமென்று வந்தவர்க்குத் தண்ணீரைத் தந்திடாது

தாகமென்று வந்தவர்க்குத் தண்ணீரைத் தந்திடாது
ஆகமங்கள் படித்துவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

சறுக்கி விழுந்தவர்களை தூக்கிநிறுத்த உதவாது
இருவிழிநீர் சிந்தியென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

தந்தைதாய்க்கு சேவைகள் செய்திடாது புறக்கணித்து
எந்தையைநீ நினைத்துவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

கருணையோடு கூடவாழும் தீனருக் குதவிடாமல்
ப்ரவசனங்கள் கேட்டுவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

வருத்தும்பசி போக்குமுணவு வழங்கிடாது தானதர்மம்
பெருமைக்காக செய்துவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

புண்ணியதீர்த் தங்களாடி புறவழுக்கு நீங்கிமாசு
எண்ணத்திலே வைத்துவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

தந்தைதாயின் திருவடியில் சொர்கமுண்டு நீயறிவாய்
வந்தனங்கள் செய்துவாழு நெஞ்சமே - நீ

பழியிலிருந்து மீளுகொஞ்சமே

Baba - சீரடி ராஜா பதில் சொல்லு


சீரடி ராஜா பதில் சொல்லு
சீக்கிர மெனக்கு பதில் சொல்லு
ஓடிவந்தேனே உனை நம்பி
உண்மையை எனக்கு நீ சொல்லு  

உன்தரி சனம்நான் கண்டிடவே
இருமுறை சீரடி வந்தேனே
என்வீட்டிற்கு எனைத் தேடி
ஒருமுறையேனும் வந்தாயா

சீரடி ராஜா பதில் சொல்லு
சீக்கிர மெனக்கு பதில் சொல்லு
ஓடிவந்தேனே உனை நம்பி
உண்மையை எனக்கு நீ சொல்லு 

சின்னஞ் சிறிய வீடென்று
சாயி நீயும் நினைத்தாயோ
தின்ன எதுவும் தரமாட்டேன்
என்றே நீயும் பயந்தாயா
உன்நிலைமைக்கு நான் ஈடு
இல்லை என்று  நினைத்தாயோ
என்வீட்டிற்கு எனைத் தேடி
ஒருமுறையேனும் வந்தாயா

மதியா தாரின் வீட்டிற்கு
எவரும் இங்கே செல்வதில்லை
எதிரியா நானும் தெரியவில்லை
என்வீட்டிற்கேன் வரவில்லை