Monday, March 31, 2014

Krishna - கண்ணன் வருகின்ற நேரம்

கண்ணன் வருகின்ற நேரம் - அவன்
குழலும் ஒலிக்கின்ற நேரம் - இனி
எண்ணம் அவன்மீது கூடும் - என்
இதயம் அவன்பெயரைப் பாடும்


நயனம் அவனழகைப் பருகும் - என்
நெஞ்சம் நெய்யாக உருகும் - அவன்
மயக்கும் தெய்வீக அழகில் - என்
மனதில் ஸ்ரீராகம் ஒலிக்கும்  -இந்த
கயிறு அரவாகும் பொழுதில் – அவன்
கண்கள் கவிதைகள் எழுதும்

(கண்ணன் வருகின்ற )

மடியில் தலைவைத்துக் கிடப்பேன் – கண்
மூடியே ராதைநான் நடிப்பேன் – என்
உடலோ அவன்கைகள் தேடும் – கனி
இதழோ இதழ்காண ஏங்கும் – என்னை
படிக்க நூல்போல பிரிப்பான் – அவன்
படித்த பின்னாலே சிரிப்பான்

(கண்ணன் வருகின்ற )

அவனைச் சேர்கின்ற பொழுது – என்
உயிரும் மலர்கின்ற பொழுது – ஒரு
கவலை இல்லாத இளமை – அவன்
கண்கள் என்றென்றும் புதுமை – ஒரு
உவமை இல்லாத உறவு – இனி
என்றும் கூடாது பிரிவு

(கண்ணன் வருகின்ற )


Sunday, March 30, 2014

Vishnu - திருவரங்கக் கோவிலிலே


Vishnu - இருள் விலகுமா
















பல்லவி

இருள் விலகுமா ஞான ஒளி பிறக்குமா
அரங்கன்தன் திருக்கோவில் எனை அழைக்குமா

அனுபல்லவி

உருகாத நெஞ்சினையும் அனலிட்ட நெய்யாக
உருகவைக்கும் அவனழகை விழி பருகுமா

சரணம் 1

சிரசின் கீழ் கைகொடுத்த சிங்கார மாயவனை
அருகிருந்து நான் காணும் அருள் கிடைக்குமா  
அரவிந்தன் பாதங்கள் அடியவனின் சிரம் பட்டு
அறியாத ஞானமெல்லாம் அறிவிக்கு மா

(பல்லவி )

சரணம் 2

ஒருநூறு பிறவி இன்னும் சம்மதம் தான் எனக்கு
அரங்கத்தில் ஜனமிக்கும் வரம் கிடைக்குமா
மறவாது உன் நாமம் மாலவனே உன் புகழை
அருந்தமிழில் நான் பாடும் திறம் கிடைக்குமா

(பல்லவி)



Thursday, March 27, 2014

Krishna - ராதை ஏன் கோபம் கொண்டாள்



மது வனம் தன்னில் கண்ணன்
கோபியரைப் பார்த்திருந்தான்
கோபியரும் கண்ணன் குழல்
ஓசைதனைக் கேட்டிருந்தார்
ராதையும் கோபம் கொண்டாள்
ராதையும் கோபம் கொண்டாள்
உடல் மனம் கொதித்து நின்றாள்
ராதையும் கோபம் கொண்டாள்
ராதையும் கோபம் கொண்டாள்

மது வனம் தன்னில் கண்ணன்
கோபியரைப் பார்த்திருந்தான்
மன வனம் தன்னில் அவன்
ராதையினைச் சேர்ந்திருந்தான்
ராதை ஏன் கோபம் கொண்டாள்
ராதை ஏன் கோபம் கொண்டாள்
கண்ணன் மனம் அறியவில்லை
ராதை ஏன் கோபம் கொண்டாள்
ராதை ஏன் கோபம் கொண்டாள்

எத்தனைபேர் வந்தாலும்
ராதையே  ராணி
காதல்கடல் கடக்க 
அவள்தான் தோணி

கண்களை அங்கும் இங்கும்
ஓட விட்டால் ஈன மது
கண்ணன் மேல் காதல் கொண்ட
ராதைக்கு அவ மானமிது

கோபியர் வந்து போவாரே
ராதைக்கு ஈடு ஆவாரோ
கோபியர் வந்து போவாரே
ராதைக்கு ஈடு ஆவாரோ

கண்ணனின் கண்ணில்
காதல் மழைக்கும்
ராதையின் பெயரை
நெஞ்சம் அழைக்கும்

ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பொய்யினை உண்மைபோல
பேசுமிந்தப் பொய்யனிடம்
ராதையும் கோபம் கொண்டாள்
ராதையும் கோபம் கொண்டாள்
உடல் மனம் கொதித்து நின்றாள்
ராதையும் கோபம் கொண்டாள்
ராதையும் கோபம் கொண்டாள்

மனதினில் ராதைமேல்
காதலெனக் கூறுகிறான்
காதலைக் சொல்லாதேன்
வேறுதிசை ஓடுகிறான்

காதலை வார்த்தைகளில் காதலர்கள் சொல்வதில்லை
ராதையவன் விழிகளிலே காதலையேன் காணவில்லை

கண்களை எப்படிப் படித்திடுவாள்
காணும் போதேயவள் துடித்திடுவாள்
கண்களை எப்படிப் படித்திடுவாள்
காணும் போதேயவள் துடித்திடுவாள்


இதழ் உலர்ந்திடும் முகம் சிவந்திடும்
இதயம் நூறு தூளாய் வெடித்திடும்

ராதைதான் கண்ணனுயிர் என்றுஅவள் அறிந்துகொண்டால்
கோபமினி வாராதடி  வாராதடி வாராதடி

ராதையும் கோபம் கொண்டாள்
ராதை ஏன் கோபம் கொண்டாள்
ராதையும் கோபம் கொண்டாள்
ராதை ஏன் கோபம் கொண்டாள்












Baba - பாபா பாட்டு பாடிடுவோமே

வெய்யில் பட்ட பனியைப் போல
வினைகள் ஓடும் என்
அய்யன் பாதம் பணிந்த வருக்கு
அல்லல் தீரும்
யானிருக்கப் பயமேன் என்ற
அன்னை அல்லவா - அவன்
கலியுகத்து வரதன் என்பது
உண்மை அல்லவா

அவன் விழியில் கருணை கண்டேன்
அவன் சொல்லில் வேதம் கண்டேன்
அவன் தாளில் சொர்க்கம் கண்டேன்
அவனுருவில் சிவனைக் கண்டேன்

அவனிருக்கப் பிறவிக் கடலும்
ஓடை தானம்மா - ஒரு
தவமிருக்கத் தேவையில்லை
கவலை ஏனம்மா

(வெய்யில் பட்ட)

சீரடியைத் தேடி  நாமும்
சீக்கிரமாய்ப் போவோம் வாரும்
ஓரடி நாம் நெருங்கிச் சென்றால்
நூறடி அவன் வருவான் பாரும் 

பத்தின்கூட ஒன்று சொன்னான்
பக்தருக் காகத்தான் - அவன்
நித்தியமும் வாழ்ந்திருப்பான்

நம்மைக் காக்கத்தான்

Baba - சீரடியின் மரங்களில்

சீரடியின் மரங்களிலும் சாயி இருக்கிறான்
சிறகடிக்கும் பறவையிலும் சாயி இருக்கிறான்
தேடிவரும் அன்பர்களின் நெஞ்சில் இருக்கிறான்
சரணடைந்தாய் என்னைநீ அஞ்சேல் என்கிறான்

சாயியிடம் வந்தபின்னர் என்ன கலக்கம் - அவன்
திருவடிகள் பற்றியபின் இல்லை வருத்தம்
தேய்பிறையாம் வாழ்வுகூட வளர்பிறை யாகும் - இந்தச்
சீரடியில் வந்துவிட்டால் ஒருமுறையேனும்

நித்தமுமே விளக்கேற்றி அவனை நினைப்போம் - அவன்
நாமத்தினால் நம்முடைய இதயம் நிறைப்போம்
சத்தியமாய் சொல்லுகிறேன் இதனைக் கேளுங்கள் - என்

சாயியிடம் சரணடைந்து விதியை ஆளுங்கள்

Baba - சீரடியாம் தலமிருக்கு

சீரடியாம் தலமிருக்கு
சென்றுவர  நலமிருக்கு
பாபாவின் பெயரிருக்க
புத்தியிலே பயமெதற்கு (2)

பதினொரு விதியிருக்கு
பாசமுள்ள மொழியிருக்கு
கதியில்லாத் தீனருக்கு
கருணையுள்ள விழியிருக்கு (2)

துவாரிகா மாயிதனில் 
தெய்வமொன்று குடியிருக்கு  
வாசலிலே வருபவருக்கு 
வரங்கள் தரவே காத்திருக்கு

தேவன்தாள் பணிந்தவருக்குத்
துன்பமில்லைத் துயரமில்லை
நாதனவன் நமக்கு அன்னை  
நாமெல்லாம் அவன்தன் பிள்ளை

(சீரடியாம் தலமிருக்கு )

அவனிருக்க பயம் இல்லை
அன்பினுக்கு அவன் எல்லை
கவலைக்கொரு இடம் இல்லை
கண்டுகொள்வோம் அவன் எல்லை

தேவன்தாள் பணிந்தவருக்குத்
துன்பமில்லைத் துயரமில்லை
நாதனவன் நமக்கு அன்னை 
நாமெல்லாம் அவன்தன் பிள்ளை

(சீரடியாம் தலமிருக்கு )


Krishna - கண்ணன் குழலோசை


கண்ணன் குழலோசை தான்சுமந்திடும்
காற்றும் மிக நல்லதே
மன்னன் அவன் பாதம் முத்தாடிய
மண்ணும் மிக நல்லதே

(கண்ணன் குழலோசை)

யமுனை நதியோர மரம் தன்னிலே
மலர்கள் மிக பூக்குமே
யதுகிரியின் பாதம் நோகாமல் காக்கும்
அவையும் மிக நல்லதே
விமலன் பாதங்கள் ஸ்பரிசித்த நதியை
வானம் கொண்டாடு மே

(கண்ணன் குழலோசை)

மன்னவன் முடிசேர்ந்த மயிற் பீலியும்
மனதை பறி கொள்ளுமே
மார்பில் அசைந்தாடும் மணம்வீசும் துளசி
மாலை அது நல்லதே
சின்னஞ் சிறுகுழந்தை ரூபத்தைக் கண்ட
கண்கள் மிக நல்லதே

(கண்ணன் குழலோசை)

கீதையை தான்சொன்ன குரு பிறந்ததால்
கோகுலம் நல்லதே
ராதை உள்ளத்தில் குடிகொண்ட தாலவள்
பெயரும் மிக நல்லதே
நாதன் பெயர்நானும் கவிதன்னில் வைத்த
நாளும் மிக நல்லதே

(கண்ணன் குழலோசை)



Friday, March 7, 2014

Hanuman - நங்கை நல்லூர் உறையும்

Audio clip of the song

பல்லவி :

நங்கை நல்லூர் உறையும் ஜெய மாருதி - இங்கு
நீ தானே என்னுடைய சரணாகதி
சங்கடங்கள் தீர்த்திடுவாய் ஜெய மாருதி - என்றும்
என்னுடைய வானத்தில் நீயே மதி
(பல்லவி)

சரணம் 1

அம்பரத்தைத் தொட்டுவிடும் உயரத்தில் - நீ
இருப்பதினால் மறந்தனையோ ஜெய மாருதி
துன்ப நிலை ஒழிந்திடுமா ஜெய மாருதி - இங்கு
செல்வ மழை பொழிந்திடுமா ஜெய மாருதி
 (பல்லவி)

சரணம் 2

விடையில்லாக் கேள்வி ஆச்சு ஜெய மாருதி - என்
வாழ்க்கையொரு வேள்வி ஆச்சு
வடைமாலை சாற்ற வந்தேன் ஜெய மாருதி - நல்ல

வழி நீயும் காட்டிடுவாய் ஜெய மாருதி
(பல்லவி)