Friday, May 23, 2014

General - ஏன் அழுதான்?

இலைகளினூடே சில்லறையாய்
இறைந்திருந்த வெய்யில்.
மரத்தின் நிழல்
மனதுக்கும் உடலுக்கும் இதம்.

காலையில் சாப்பிடாத வயிறு
கண்களைத் தாலாட்ட
வந்த கனவிலும் பசி.

ஏதோ ஒரு கை
(பார்த்தேயிராத அம்மாவுடையதோ?)
ஒரு கவளம் சோறு
ஊட்ட யத்தனித்தபோது
உதை விழுந்தது.

வலியில் துடித்து விழித்தன கண்கள்.

"மாட்டுக்குத் தண்ணி வக்காம
தூக்கம் என்னலே சவமே? த்தூ..."

மேலே வழிந்த எச்சிலில்
பன்னீர் புகையிலை வாசம்.

அழுக்குச் சட்டையால்
அவமானத்தைத் துடைத்துக் கொண்டு
மாட்டுக்குத் தண்ணி வைக்கையில்
அது சிரித்த மாதிரி இருந்தது.

திரும்ப யத்தனித்தக் கால்கள்
தனிமையை உணர்ந்து
தான் வாங்கிய உதையை
மாட்டுக்குத் தானம் செய்தது.

"சிரிப்பால சிரிச்ச?"

மாடு அழுதது.
எதற்கென்று தெரியாமல்
அவனும் அழுதான்.

No comments:

Post a Comment