Wednesday, May 21, 2014

Vishnu - தாயேவென தவித்து குரல் கொடுத்தும்

தாயேவென தவித்து குரல் கொடுத்தும்
வாரதி ருப்பது முறையோ? தாயுமுன்
மலர்ப்பதம் பிடித்த மயக்கமோ? தூக்கக்
கலக்கமோ? ரங்கநா தா.

முன்னை யானைக்கு மோட்ச மருளினாய்
பின்னை கல்லை பெண்செய்தாய்- என்னை
நல்வழிப் படுத்த நாளும் குறித்தாயோ?
சொல்லுநீ ரங்கநா தா

நீநினைக் காதுநான் நினைப்ப தெவ்விதம் ?
நீநினைக் காதது  நீதியா? நீநினைத்தால்
நிமிடத்தில் வருமே நற்கதி! தெவிட்டாத
அமுதமே ரங்கநா தா 

வம்பனுக் கருள்செய வழியில்லை என்றோ
சும்மா யிருக்கிறாய் ஸ்ரீதரா? உம்பர்தொழும்
பாற்கடல் துயிலும் பெருமானே எனக்கெலாம்
நீயேதான் ரங்கநா தா

மற்றொன்று ஏனுன்  மலரடி போதுமென்றும்
சற்றும்நீ இறங்காதது சரியா? முற்றிய
ஆலவிடம் போன்ற உலகியல் கடந்திடவே 
பாலம்நீ  ரங்கநா தா

மோகம் கரைந்திடவும் முழுமலம் அகன்றிடவும்
சோகம் தீர்ந்துநான் சிறப்புறவும் மேகமாய்
சிறுவன் என்மீது சொரிந்திடுவாய் அருளைஎன்

குருவேநீ ரங்கநா தா 

No comments:

Post a Comment