Friday, March 13, 2015

Vishnu - அரங்கனைக் காண எத்தனை விழிகள்

அரங்கனைக் காண எத்தனை விழிகள்
அவனடி தொழுதிட எத்தனை கரங்கள்
வரங்களை வேண்டி வளங்களை வேண்டி
வணங்கியே நிற்கும் எத்தனை மனங்கள்

(அரங்கனைக் காண...)

அரங்கம் அன்றியோர் கோவிலும் இல்லை
அரங்கன் அன்றியோர் கடவுளும் இல்லை
திருவடி கண்டால் தொல்லைகள் தீரும்
திருமகள் அருளால் பொருள்களும் சேரும்

(அரங்கனைக் காண...)

மறுபிறப்பென்று மாதவன் பணித்தால்
மறுபடி மறுபடி அரங்கினில் பிறப்பேன்
திருவடியதனைச் சிந்தையில் நிறுத்தி
சந்ததம் அவனது நினைவில் இருப்பேன்

(அரங்கனைக் காண...)  வீயார்

Parvati - மயிலையில் ஒளிர்கின்ற ஜோதி

மயிலையில்  ஒளிர்கின்ற ஜோதி - இந்த
மண்ணுலகைப் படைத்திட்ட ஆதி
தயங்காது கலங்காது வாரும் - அவள்
தர்பாரில் கிடைக்கும் நல்நீதி

(மயிலையில்  ஒளிர்கின்ற..)

வெறுங்கையுடன் அடியார்கள் வருவார் - அவள்
வரமெல்லாம் அள்ளியேத் தருவாள்
பரிவோடு நமைகாத்து அருளும் - அவளின்
பரிபாலனம் போலெங்கும் இல்லை

(மயிலையில்  ஒளிர்கின்ற..)

தந்தைதாய் அவளாகி நிற்பாள் - நமது
தேவைகள் அவள்தீர்த்து வைப்பாள்
அந்தகாரத்தில் ஒரு ஒளியாய் - நமது
இதயத்தில் அவளென்றும் ஒளிர்வாள்

(மயிலையில்  ஒளிர்கின்ற..)

பாராதி அண்டங்கள் படைத்தாள் - அந்தப்
பிரணவத்தின் வடிவாகிச் சிரித்தாள்
வாராது வந்தமா மணியாய்  - நமது
வாழ்வினிலே என்றென்றும் இருப்பாள்

(மயிலையில்  ஒளிர்கின்ற..)

Venkatesh Radhakrishnan Iyer


Thursday, March 12, 2015

Baba - வியாழன் என்றாலே வருமொரு பாட்டு

வியாழன் என்றாலே வருமொரு பாட்டு
ஸாயிதன் அழகிய திருமுகம் பார்த்து
நாதனின் நாமம் நாவினில் இனிக்கும்
பாதங்கள் கண்ட விழிகளும் பனிக்கும்

(வியாழன் என்றாலே...)

அவன் புகழ் பாடிடத் தமிழ்வந்து சேரும்
அவன் பெயர் சொல்லியே கவிதையும் கூடும்
கவலைகள் எல்லாம் கணத்தினில் தீரும்
உவகையும் வந்து இதயத்தில் மோதும்

(வியாழன் என்றாலே...)

அவனைப் பாடுதல்  பிறவியின் பலனே
அவனும் பார்த்தால் எல்லாம் நலனே
நயனத்தில் அவனே நெஞ்சினுள் அவனே
நாரணன் அவனே அவனே சிவனே

(வியாழன் என்றாலே...)

விளக்கினில் நீரை விட்டவன் எரித்தான்
வந்தவர் கரங்களில் வரங்கள் நிறைத்தான்
கலங்கிட வேண்டாம் கும்பிடு வோமே
காத்தல் அவன்கடன் நம்பிடு வோமே

(வியாழன் என்றாலே...)