Friday, December 27, 2013

Vishnu - மாதவனின் அடிவணங்கி வாழ்ந்திடுவோமே

மாதவனின் அடிவணங்கி வாழ்ந்திடுவோமே அந்த
மலர்மகளின் அருள்மழையில் நனைந்திடுவோமே

நாதனவன் பெருமையெலாம் நெஞ்சுருகிடவே - சொல்லும் 
நாலாயிர பாசுரங்கள் நினைத்திடுவோமே

போதகனாய் பார்த்தனுக்கு போர்க்களம் தன்னில் - சொன்ன
பாதையிலே நாம்நடந்து பேறடைவோமே

மாதவனின் அடிவணங்கி வாழ்ந்திடுவோமே அந்த
மலர்மகளின் அருள்மழையில் நனைந்திடுவோமே

இரும்பு துண்டை காந்தமது இழுப்பதுபோலே - உந்தன்
திருநாமம் கொண்டுயெனை ஈர்த்திடுவாயே

கரும்பை யொத்த இணையடிகள் கொடுத்து நீயுமே - என்
கண்ணீரை துடைத்தெனையும் காத்திடிடுவாயே 

மாதவனின் அடிவணங்கி வாழ்ந்திடுவோமே அந்த

மலர்மகளின் அருள்மழையில் நனைந்திடுவோமே

Vishnu - ஆழ்வார்க்கு அடியேன்

பிரபந்தத்தின் முதல்நூறை பாசமோ டருளிய
பரந்தாமன் கைச்சங்கம் பொய்கைக்கு அடியேன்

கவுமோதகி அம்சமாய் கடல்மல்லை தலத்தில் 
அவதரித்த பூதத்து ஆழ்வாருக்கு அடியேன்

கரம்கொண்ட நந்தகமே கவிபாட பிறந்ததுவோ?
திருமயிலை பேயாழ்வார் திருவடிகளுக் கடியேன்

தொழுதவர் துயர்போக்கும் சுதர்சனத் திருவுருவம்
மழிசை ஆழ்வாரின் மலரடிக்கு அடியேன்

அருமறைச் சாரமாய் ஆயிரத்து நூற்றிரண்டு
திருவாய் மொழிதந்த நம்மாழ் வார்க்கடியேன் 

கண்ணிநுண் சிறுத்தாம்பை காதினிக்கும் தமிழில்
பண்பாடிய மதுரகவி ஆழ்வாருக்கு அடியேன்

மாலவன் திருமார்பம ஆடிடும்  கௌஸ்துப
மாலையின் அம்சமாம் குலசேகரர்க் கடியேன்

பரமனைத் தாங்கியே பறந்திடும் பெரிய
திருவடிகள் அம்சமாம் பெரியவர்க் கடியேன்

திருப்பாவை சொன்னாள் ஒருபாவை அவள்
திருவடித் தாமரைக்கு என்றும்நான் அடியேன்

அண்டிய வினைநீக்கும் அருந்தமிழ் பா சொன்ன
தொண்ட ரடிப்பொடி திருவடிகளுக் கடியேன்

திருமாலின் திருமார்ப மருவான ஸ்ரீவத்ச
உருவான திருப்பாணர் ஆழ்வார்க்கு அடியேன்

கூறுதற் கரியதாம் குணங்கள் தான்கொண்ட

சார்ங்கத்தின் உருவான திருமங்கைக்கு அடியேன்  

Vinayagar - முதல் வணக்கம்



பொன்னைக் குவித்தென்ன பொருளைக் குவித்தென்ன
பூமிநிலம் சேர்த்தா லென்ன
பெயர்புகழைச்  சேர்த்தென்ன சீரோடும் சிறப்போடும்
பூமிதனில் வாழ்ந்தாலென்ன

இன்னும் இவளைவிட அழகியர் இல்லையெனும்
ஒருவளை மணந்தா லென்ன
இவர்தந்தை என்நோற்றான் எனும்படி பிள்ளையர்
இருந்தும் கூடதான் என்ன

உன்னாயுள் முடிந்ததால் என்னுடன் வாவென்று
அந்தகன் அழைத்திடும் பொழுது
அவனை நம்மிடத்தில் அண்டாது தடுத்திடவும்
ஆயுளை நீட்டித் தரவும் 

முன்சொன்ன வற்றுள் எதற்குண்டு அத்திறன்
மடநெஞ்சே நீஎண்ணு வாய்
விடுத்திந்த உலகாசை விநாயகனை எண்ணி
வாழ்க்கையை சீர் படுத்துவாய்