Wednesday, February 5, 2014

Vinayagar - ஆத்தங்கர கணபதி

ஆத்தங்கர மரங்கீழ
ஒய்யாரமா கோயில்கொண்ட
மூத்தவனே முருகனுக்கு
கணபதி எனக்கு
சாத்திரங்க சொல்றபடி
தெரியாது பூச பண்ண
ஆசையிலே ஓடி வந்தேன்
கணபதி

ராவெல்லாம் தூங்காத
ராசாவே ஒனக்காக
வீட்டசுத்தம் செஞ்சிவச்சேன்
கணபதி என்
ஆவலநீ தெரிஞ்சிகிட்டு
அன்பமட்டும் புரிஞ்சிகிட்டு
அழப்பயேத்து வரவேணும்
கணபதி

கொழுக்கட்ட செஞ்சுவச்சேன்
கூடபொரி அப்பம் வெச்சேன்
பழவகையும் பலவும் வச்சேன்
கணபதி நல்ல
மழவேண்டும் நெலம்போல
வளம்வேண்டி நாவந்தேன்
மனசார வாழ்த்திப் போடு
கணபதி

வருசமெல்லாம் மரத்துகீழ
வெய்யில்  மழ பார்காம
இருக்குறியே என்னய்யா
கணபதி நீ
ஒருவாரம் ஏழைவீட்டில்
ஓய்வெடுத்து இருந்துவிட்டு
அப்புறமா போக வேணும்

கணபதி

Tuesday, February 4, 2014

Vishnu - மானசீக ஸ்ரீரங்க தரிசனம் - ஒரு பக்தி உலா

மனதால் அரங்கம் வலம்வரு வேன்நான்
ஸ்ரீ ரங்கா ரங்கா
மனங்குளிர்ந் தெனக்கு அருள்தரு வாய்நீ
ஸ்ரீ ரங்கா ரங்கா

நினைக்கும் போதில் இனிக்கும் கரும்பே
ஸ்ரீ ரங்கா ரங்கா
நானுன் தாசன் நீயென் அரசன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

ஏழாம் சுற்றில் காலடி வைத்தேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
ஊழ்வினை சூழ்வினை அகற்றிடு வாய்நீ
ஸ்ரீ ரங்கா ரங்கா

தேசிகர்ஹயக்ரீ வரையும் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
ஆசைக ளகற்றி அறிவைத் தருவாய்
ஸ்ரீ ரங்கா ரங்கா

ஆறாம் சுற்றில் காலடி வைத்தேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
ஆரா வமுதே கருணை ஆறே
ஸ்ரீ ரங்கா ரங்கா

இராமானுசர் ஜீயர்மடம் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
அழகியமணவா ளரையும் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

ஐந்தாம் சுற்றில் காலடி வைத்தேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
சிந்தை மேவிய சுகவா ரிதியே
ஸ்ரீ ரங்கா ரங்கா

நாத முனிகளை நானும் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
நங்கை ஆண்டாள் சன்னதி கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

வேதனை தீர்க்கும் சக்கரம் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
வேங்கட நாதன் தேசிகன் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

எங்கள் அன்னை ரங்க நாயகி
ஸ்ரீ ரங்கா ரங்கா
திங்கள் முகதரி சனமும் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

ராமாயணமண் டபமும் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
லோகா சாரியார் சன்னதி கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

தொண்ட ரடிப்பொடி பாணரைக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
கூரத்தாழ்வார் உடையவர் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

நான்காம் சுற்றில் காலடி வைத்தேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
ஊனிலும் என்பிலும் உட்புகு வாய்நீ
ஸ்ரீ ரங்கா ரங்கா

முதல்மூ வரைநான் மனதால் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
மதுரகவி மங்கை மன்னனைக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

நம்மாழ் வாரை நானும் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
தன்வந் திரியின் தரிசனம் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

சந்திர புஷ்கரி ணியினைக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
சூரிய புஷ்கரி ணியினைக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

திருமழிசைத் திருக் கச்சிநம்பி
ஸ்ரீ ரங்கா ரங்கா
கருடாழ் வாரைக் குளிரக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

மூன்றாம் சுற்றில் காலடி வைத்தேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
வேண்டும் வரம்நீ தந்திடு வாயே
ஸ்ரீ ரங்கா ரங்கா

பரம பதவா சலும்நான் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
அணியரங் கன்திரு முற்றம் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

இரண்டாம் சுற்றில் காலடி வைத்தேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
கரையில்லா வருட் கடலும் நீயே
ஸ்ரீ ரங்கா ரங்கா

குலசே கரரின் கொழுந்தைக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
துலுக்க நாச்சி யாரையும் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

ஸ்ரீசை லேசத்  தனியன் இடமும்
ஸ்ரீ ரங்கா ரங்கா
சேனை முதலி யாரையும் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

முதலாம் சுற்றில் காலடி வைத்தேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
முதலும் நீயே முடிவும் நீயே
ஸ்ரீ ரங்கா ரங்கா

ஜயவி ஜயரைக் கண்டேன் நானும்
ஸ்ரீ ரங்கா ரங்கா
அயர்ச்சி நீங்கி ஆனந்த மடைந்தேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

அணுக்கன் திருவா சலில்நின் றேன்நான்
ஸ்ரீ ரங்கா ரங்கா
ஆதிவ ராகனை கண்டேன் நானும்
ஸ்ரீ ரங்கா ரங்கா

குலசே கரன்படி அடைந்தேன் நானும்
ஸ்ரீ ரங்கா ரங்கா
மலர்முகம் கண்டு மயங்கியே நின்றேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

உள்ளே இருந்தொரு ஒளிவரக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
உடலும் மனமும் குளிர்ந்திட நின்றேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

மெள்ளவே கண்கள் பழகிய பின்னர்
ஸ்ரீ ரங்கா ரங்கா
மெய்சிலிர்க்கும் ஓர் அற்புதம் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

ஐயிரு கண்கள் மிளிர்ந்திடக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
அண்ணலைத் தாங்கிய பெருமிதம் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

பைந்நாகப் பாய் கண்டேன் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
படுத்திருக்கும் திரு மேனியும் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

வலக்கை சிரத்தை தாங்கிடக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
மலர்க்கண் நாசி க்ரமமாய் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

இடக்கைத் திருவடி காட்டிடக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
இதுதான் சத்தியம் எனும்சொல் கேட்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

வருணித்திடவே வார்த்தைகள் இல்லை
ஸ்ரீ ரங்கா ரங்கா
திருவரங்கன் தான் கருணையின் எல்லை
ஸ்ரீ ரங்கா ரங்கா

அவனே சத்தியம் அவனே நித்தியம்
ஸ்ரீ ரங்கா ரங்கா
அவனின் றியொரு அணுவும் இல்லை
ஸ்ரீ ரங்கா ரங்கா

வேழம் காத்தான் நம்மையும் காப்பான்
ஸ்ரீ ரங்கா ரங்கா
தாழ்ந்திடுவோம் அவன் திருவடி நாமும்
ஸ்ரீ ரங்கா ரங்கா

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
ஸ்ரீ ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா
ஸ்ரீ ரங்கா ரங்கா

துன்பம் எல்லாம் தொலைந்திடக் கண்டேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா
இன்பக் கடலில் ஆழ்ந்துவிட் டேனே
ஸ்ரீ ரங்கா ரங்கா

மண்ணை விண்ணை அளந்தாய் நீயே
ஸ்ரீ ரங்கா ரங்கா
என்னை அளப்பது அரிதா உனக்கு
ஸ்ரீ ரங்கா ரங்கா

என்ன தவங்கள் செய்தேன் நானும்
ஸ்ரீ ரங்கா ரங்கா
நின்னைக் காணும் நற்பயன் பெற்றேன்
ஸ்ரீ ரங்கா ரங்கா

அரங்கம் என்று வருவேன் என்று
யானறியேன் ரங்கா
குருவருளால் இன்று கற்பனையில் வலம்
வந்தேன் ஸ்ரீ ரங்கா

நாரணனே பிரமன்கை நான்கு வித ஆரணம்
நாரணனே புவியின் நிகழ்வுக்குக் காரணம்
நாரணனே எங்கும் நிறைந்திட்ட பூரணம்
நாரணனே என்று அழைத்தொரு வாரணம்

அவனைக் காண அவனழகு தெரியும்
அவனைப் பேச அவன்சுவை புரியும்
அவனே இங்கு இரவும் பகலும்
அவன்நினை வாலே வினைகள் அகலும்

Monday, February 3, 2014

Murugan - மருதமலை முருகன் துதி

மருதமலை மீதுஎங்கள் முருகனவன் ஆட்சி
திரளுமொரு கூட்டமவன் திருவருளின் சாட்சி
திருவடிகள் பணிந்ததுமே தீவினையின் வீழ்ச்சி
தனக்குவொரு ஈடுஇல்லா திருக்குமரன் மாட்சி

திருமுருகா வா
திருவருள் தா தா

ஆறுபடை வீடுபோன்ற கோவில் ஒன்றிது  குன்று
தோறாடல் வரிசையிலே  வந்த குன்றிது (2)
ஏழுநூறு படிகள் கடந்து உலகினைக் காக்க - அந்த
அழகன் நின்று காட்சி தரும் அழகு குன்றிது

திருமுருகா வா உந்தன்
திருவருள் தா தா

மருதமலை மீதுஎங்கள் முருகனவன் ஆட்சி
திரளுமொரு கூட்டமவன் திருவருளின் சாட்சி

திருமுருகா வா
திருவருள் தா தா

உடற்பிணிகள் போக்கவிங்கு மூலிகை உண்டு - உள்ளக் 
கிடக்கைதனை தீர்க்கயிங்கு வேலன்கை உண்டு (2)
படமெடுத்து ஆடும்பாம்பு சித்தரும் உண்டு - தனது
பக்தருக்கு வரமருளும் சித்தமுமுண்டு

திருமுருகா வா உந்தன்
திருவருள் தா தா

மருதமலை மீதுஎங்கள் முருகனவன் ஆட்சி
திரளுமொரு கூட்டமவன் திருவருளின் சாட்சி
திருவடிகள் பணிந்ததுமே தீவினையின் வீழ்ச்சி
தனக்குவொரு ஈடுஇல்லா திருக்குமரன் மாட்சி

திருமுருகா வா
திருவருள் தா தா
திருமுருகா வா

திருவருள் தா தா

Sunday, February 2, 2014

General - வாழ்க்கை என்னும் ஆசான்


தெளிந்தவுறுதி நெஞ்சினுக்கு தோல்வியென்று மில்லை
அலைகளுக்கு பயந்தபடகு ஆழிகடந்த தில்லை

சிற்றெறும்பு உணவுசுமந்து சுவற்றிலேறும் போதிலே
சற்றுதளர்ந்து சறுக்கினாலும் சோர்ந்துபோவ தில்லை
வெற்றிக்கனி பறித்திட்ட மாமனிதர் இதைபோல
விடாமுயற் சியினாலே வென்றகதை பலவுண்டு.

தெளிந்தவுறுதி நெஞ்சினுக்கு தோல்வியென்று மில்லை
அலைகளுக்கு பயந்தபடகு ஆழிகடந்த தில்லை

ஆழ்கடலுள் முத்தெடுக்க செல்லுகின்ற மனிதனுக்கு
எடுத்தவுடன் கிடைக்குமென்று உறுதிகூற முடியாது
மீண்டும்மீண்டும் கடலினுளே முயன்று மூழ்கினால்தான்
முத்தெடுப்பான் இதுவேநம் வாழ்விற்கும் பாடமாம்

தெளிந்தவுறுதி நெஞ்சினுக்கு தோல்வியென்று மில்லை
அலைகளுக்கு பயந்தபடகு ஆழிகடந்த தில்லை

தோல்வியொரு கேள்வியாகும் கேள்வியின் விடைதேடு
தோல்வியொரு பாடமாகும் பாடத்தைநீ படித்துப் பாரு
தோல்வியின்  பாரத்திலே சோர்ந்துபோகக் கூடாது
திருக்குறளும் இதைச்சொல்லும் முயற்சித்திரு வினையாக்கும்

தெளிந்தவுறுதி நெஞ்சினுக்கு தோல்வியென்று மில்லை
அலைகளுக்கு பயந்தபடகு ஆழிகடந்த தில்லை

Iyappan - பொருளொன்றும் தேவை இல்லை

பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா 
இருள்நீக்கி ஒளிதந்தாயே - இந்த
அருளொன்று போதும் ஐயப்பா 

பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா 

பிடிவாதம் தனைமாற்றி னாயே - உன்
பதினெட்டுப்  படியேற்றி னாயே
கடிவாளம் இட்டெந்தன்  மனதை - உன்
காவலிலே பூட்டி னாயே

பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா 

புயல்காற்று அடித்தாலும் என்ன இல்லை
பூமிபி ளந்தாலும் என்ன
நயனத்தை இமைகாப்ப தைப்போல் - என்னை
நீகாக்க வேணுமய் யப்பா

பொருளொன்றும் தேவை இல்லை - உன்
அருளொன்று போதும் ஐயப்பா