Sunday, September 28, 2014

Krishna - கோகுலத்தின் உயிர்நாடி

கோகுலத்தின் உயிர்நாடி கண்ணன் நீயடா - உந்தன்
கழுத்தில் உள்ள கௌஸ்துபமோ கன்னி நானடா

(கோகுலத்தின் உயிர்நாடி ...)

வேணுகானம் கேட்டு அங்கு பறவைகள் பாடும் அந்த
நாதத்தினைக் கேட்டு யமுனை நதியுமே ஓடும்
நானும் அந்த கானத்திலே என்னை மறந்தேன்  உன்
நறுமணக்கும் திருமேனி நினைவில் அமிழ்ந்தேன்

(கோகுலத்தின் உயிர்நாடி ...)

பசுக்கள்மீது உள்ள கருணை பாவைக் கில்லையா - எனைப்
பாசமுடன் அணைப்பதுமே உனக்குத் தொல்லையா
வசிக்க ஒரு இடமும் உந்தன் நெஞ்சில் தந்திடு - என்
யௌவனமும் உனக்குத் தந்தேன் கொள்ள வந்திடு

(கோகுலத்தின் உயிர்நாடி ...)

Thursday, September 18, 2014

General - தாயுமானவர்

உன்தமிழைப் படித்து வந்தேன் உன்னாலே தமிழ் அறிந்தேன்
குன்றாதத் தமிழின் சுவையில் கள்ளுண்ட வண்டு ஆனேன் (2)

(உன்தமிழைப் படித்து வந்தேன்)

மலர் அவிழ்த்த மணமாகி மனம் பரவும் உனது தமிழ்
இலக்கணங்கள் கற்றிடவே இது போலே ஏது தமிழ்

சைவ சமயமும் போற்றி வணங்கிடும்
தெய்வ புலவனே தமிழ்மகனே
தமிழின் அறிவோடு சிவனை கலந்திங்கு
அமுது போலூட்டும் திருவருளே

(உன்தமிழைப் படித்து வந்தேன்)

ஞானத்திலே ஊறியதோர் தேனடையோ உனது தமிழ்
சிவநெறியை ஊட்டிவிடும் கவிநெறியோ உனது தமிழ்

மதமும் கடந்திங்கு மனதில் அமர்ந்திட்ட
பதும நிதியாகும் உனது தமிழ்
தேடின் கிடைக்காத ஆடல் நாதனின்
பாதம் சேர்த்திடும் உனது தமிழ்

(உன்தமிழைப் படித்து வந்தேன்)


Wednesday, September 17, 2014

Sudarsana - அக்கரத்தின் சக்கரத்தை அருந் தமிழில் பாட வந்தேன்

அக்கரத்தின் சக்கரத்தை அருந் தமிழில் பாட வந்தேன்
இக்கடலின் எல்லை தாண்ட உன்னுதவி நாடி வந்தேன்

(அக்கரத்தின் சக்கரத்தை)

சுதர்சனமுன் பெயரைச் சொல்ல செல்வ மெலாம் குவிந்து விடும்
நிதமும் உன்னை நாம் நினைக்க நம்வினைகள் அகன்று விடும்

அண்ட பேரண்டம் அங்கு நிற்பது
உனது சுழற்சியால் என்றறிவேன்
மீண்டு மிங்குநான் வந்தி டாதபடி
வரங்கள் கேட்டுநான் வந்திடுவேன்

(அக்கரத்தின் சக்கரத்தை)

திரிபுரத்தை சிவனெரிக்க சூலத்தின் முனையிருந்தாய்
அறியாமை எனுமிருளை அகற்றிடவும் நீ வருவாய்

ஆறு கல்யாண குணங்களைத் தன்
அகத்தில் அடக்கிய சுதர்சனமே
சீறி ஒளிர்கின்ற தீயின் ஜ்வாலைகள்
அழகு சேர்ப்பதொரு நிதர்சனமே

(அக்கரத்தின் சக்கரத்தை)





Tuesday, September 16, 2014

Ganesh - Muzhumudhalai kaana vandhen

முழுமுதலைக் காண வந்தேன்
முதன் முதலாய் காண வந்தேன்
கொழுக்கட்டை உண்ணும் செல்ல
கணபதியைக் காண வந்தேன்

(முழுமுதலைக் காண வந்தேன்)

கந்தனுக்கு மூத்தவனாம்
குவலயத்தைக் காப்பவனாம்
வந்தவரின் குறையறிந்து
வரங்களினால் தீர்ப்பவனாம்

கண்ணதாசனின் கருத்தைக் கவர்ந்திட்ட
காவல் தெய்வமே கற்பகமே
கண்ணை கவர்கின்ற பிள்ளை யார்பட்டி
கோவில் கொண்டவென் கணபதியே

(முழுமுதலைக் காண வந்தேன்)

மலைக்குகையின் சுவற்றினிலே
செதுக்கியதோர் திருவுருவம்
வலம்புரியாய் தும்பிக்கை
வரங்கள் தரும் இரண்டு கரம்

அர்த்த பதுமத்தில் அமர்ந்து அருள்கின்ற
சித்தம் மேவிய சிவகுமரா
அத்தன் என்றுனை அண்டி வந்தவரை
அன்புடன் காக்கும் ஓங்காரா

(முழுமுதலைக் காண வந்தேன்)