Wednesday, May 21, 2014

Murugan - அறுபடை வீடு கொண்ட குமரா

வண்டுகள் மகரந்த மணம்கமழும் தோட்டத்து
மலரெவ் விதம் நாடுமோ
தண்டைகள் ஒலித்திடும் தெய்வீக மணமுள்ள 
தாளிணையை மனம் நாடுமே
விண்ணவர் கோன்மகளை திருப்பரங் குன்றிலே
மணமுடித்து நின்ற குமரா
எண்ணிறந்த கதிரவர்கள் ஒன்றுசேர்ந் தார்போல
ஒளிவீசி நிற்கும் அமரா

படையெடுத்து வந்தபெரும் தடைகளை வென்றாய்
பதுமனை நீயும் கொன்றாய்
கொடியிலே சேவலாய் காலடியில் ஒருமயிலாய் '
கனிவுடனே காத்து  நின்றாய்
இடையிலே கண்கவர அணிந்தாய்நீ சிற்றாடை
அதுதங்கம் போலொளிரு மே
கடலாடும் செந்தூரை வேல்கொண்டு அரசாளும்
கந்தனே காத் தருளுமே

பனிரு கைகொண்டு பதினாலு லோகமும்நீ
பரிபால னம் செய்கிறாய்
இனியொரு துன்பமும் எமைநெருங் காதபடி
ஏற்பாடு நீ செய்கிறாய்
கனிதர வில்லையென கோவித்து கொண்டுநீ
குன்றுபழ நிக்கு சென்றாய்
பஞ்சா மிர்தமாய் பார்ப்பவர் கண்ணினிக்கும்
பாலக னாக நின்றாய்











பிரணவ மந்திரத்தை பிரமனும் மறந்ததால்
பிடித்து சிறையி லடைத்தாய்
குருவாகி சிவனுக்கு சுவாமி மலைதனிலே
காதிலே பொருளு முரைத்தாய்
அறுநிலவு ஒன்றுடன் ஒன்றுசேர்ந் தாலுமே
இதுபோன்ற ஒளியு மில்லை
திருமுகங்கள் ஆறும் தயவுடனே இருப்பதால்
தமிழுக்கு குறையு மில்லை

அரக்கனை அழித்தபின் அமைதியை நாடியே
அய்யனே இங்கு வந்தாய்
குறவர்குல வள்ளியை கணபதியின் துணையோடு
திருமணம் செய்து கொண்டாய்
அருமுகத்தில் கண்களும் ஈராறு உண்டலவோ
எனக்கென்று ஒன்று இலையோ?
திருமகளின் மருமகனே திருவருள் பெட்டகமும்
தீர்ந்துதான் போய்விட்ட தோ?

சுட்டபழம் கேட்டுநீ தமிழ்கிழவி அவ்வையை
திண்டாடி திணற வைத்தாய்
பட்டவினை அகன்றிடவே பழமுதிர் சோலையில்
பரமனே நீயு முறைந்தாய்
கட்டிய மனைவியும் கண்ணனின் குழந்தையும்
குறையொன்று மின்றி வாழ
தொட்டுவுன் தாள்களை சிரத்திலே வைத்தேன்

திருக்கண்கள் மலர்ந் தரளுவாய்

No comments:

Post a Comment