Wednesday, May 21, 2014

Parvati - ஸ்ரீசக்ர ராணியே ராஜரா ஜேஸ்வரியே

ஓயாமல் உனனையெண்ணி உருகும் என்மீது
பாயாதோ உந்தன் பாசவெள்ளம் உன்னுடைய
சேயான என்னைசரி யானவழி நடத்து நீ
ஸ்ரீசக்ர ராணியே ராஜரா ஜேஸ்வரியே

வாழாது வாழஉனை வந்தடைந்தேன் நானுமே
ஊழ்வினை சிக்குண்டு இன்னொரு பிறப்பெடுத்து
பாழாகப்  போகாமல் பரிவுடனே ஆட்கொள்வாய்
ஸ்ரீசக்ர ராணியே ராஜரா ஜேஸ்வரியே  

வானின் முழுமதிபோல் வதனம் கொண்டவளே
நானிலத்து காணும் நற்குணங்கள் பெற்றவளே
மோன குருவைத்தன் வலப்பாகம் வைத்தவளே
ஸ்ரீசக்ர ராணியே ராஜரா ஜேஸ்வரியே

காந்தம் இரும்பினை கவர்ந்து இழுப்பதுபோல்
கடையனை நீயும்  கருணையால் இழுப்பாயே 
தீந்தமிழ் பாட்டாலே துதிப்பேன் நானுன்னை
ஸ்ரீசக்ர ராணியே ராஜரா ஜேஸ்வரியே

ஆதிநடு அந்தமும் அகமும் புறமுமாய்
சோதிவடி வாகநீ சகமெல்லாம் நிறைந்தாயே
தீதிலா இன்பமே தேடவொண்ணா செல்வமே
ஸ்ரீசக்ர ராணியே ராஜரா ஜேஸ்வரியே

சாட்டையில் பம்பரம் சிக்குண்டாற் போல்
நாட்டம் கொண்டேனே நானும் காமவசம்
ஆட்டம் தனைநிறுத்தி ஆட்கொள்ள வருவாயே
ஸ்ரீசக்ர ராணியே ராஜரா ஜேஸ்வரியே

நேற்றிருந்தவர் இன்றிலா நிலைகண்டும் உன்பதம்
போற்றிப் பணியாது பாவமெனும் மாயச்
சேற்றிலே விழுந்தவெனை தூக்கி விடுதாயே
ஸ்ரீசக்ர ராணியே ராஜரா ஜேஸ்வரியே

காதணியால் காரிருளில் முழுநிலவு காட்டியவளே
நானென்று எனதென்று நிலையிலா வாழ்விலே
தோய்ந்து கிடக்கின்றேன் தயவிலையா என்மீது

ஸ்ரீசக்ர ராணியே ராஜரா ஜேஸ்வரியே 

No comments:

Post a Comment