Wednesday, May 21, 2014

Shiva - அம்மை அப்பனை கண்டேன்

அம்மை அப்பனை கண்டேன் ஆரிருள் நீங்கிடக் கண்டேன்
இம்மை இன்பங்கள் அருளும் ஈசனின் திருவடி கண்டேன்
உமையொரு பாகன்முன்னே ஊமையாய் பேச்சின்றி நின்றேன்
எம்குலம் தழைத்து ஓங்க ஏந்தல்முன் சிரம்தாழ்ந்து நின்றேன்

அகவிருள் போக்கு கின்ற அருளான சோதி கண்டேன்
ஆகாய ஆடை யணிந்த அந்தமிலா ஆதி கண்டேன்
புகழ்பொருள் கல்வி யென்று பலப்பல கேட்க நினைத்து
பரமனைக் கண்ட வாயும் பூட்டிக் கொண்டது கண்டேன் 

சடையில் கங்கை சிறுத்த இடையில் புலித்தோல் கண்டேன்
சர்ப்பமும் நீலக் கழுத்தைச் சுற்றி இருக்கக் கண்டேன்
தடைபோக்கி காத் தருளும் திரிசூலம் கையில் கண்டேன்
திருநீறு பூசி யிருந்த திருமேனி அழகினைக் கண்டேன்

கற்றைவார் சடையு மதிலே குளிர்மதித் துண்டும் கண்டேன்
கழுத்திலே உருத்தி ராக்க மாலையும் கண்டேன் கண்டேன்
நெற்றியில் மூடிய மூன்றாம் நேத்திரம் நானும் கண்டேன்
நன்மைகூர் நாதன் இந்த நாயன்முன் நிற்க கண்டேன்

ஒலித்தது ஆலய மணியம் ஓங்கியது அபயக் கரங்கள்
கனிந்தது கண்ண னுள்ளம் காவலும் கிடைத்த கர்வம்
இனியொரு துன்ப மில்லை இன்பங்கள் தானினி மேலே
மனதுளே தவழ்ந்த தமைதி மங்களம் உண்டாகும் உறுதி











No comments:

Post a Comment