Monday, April 28, 2014

Vishnu - அரங்கன் அன்பு

அரங்கன் அன்பிற்கு அளவேது அவன்
பெருமைகள் பாடிட மொழியேது?
திருமகள் வருடியத் திருப்பாதம் - அதைச்
சரணடைந்தாலே அது போதும்

பாம்பணை மீது துயில்கொள்வான் - அவன்
பாற்கடல் மீது படுத்திருப்பான்
வேம்பெனக் கசக்கும் வாழ்க்கையுமே - அவன்
நாமத்தைச் சொல்ல இனித்திடுமே

(அரங்கன் அன்பிற்கு அளவேது)

கரங்கள் நான்கும் நான்மறைகள் - மலர்க்
கண்கள் தீர்க்கும் நம்குறைகள்
அரங்கன் நாமம் சொல்வாய்நீ - பிறவிக்
கடலைக் கடந்திட அதுதோணி

(அரங்கன் அன்பிற்கு அளவேது)

Thursday, April 24, 2014

Vishnu - அரங்கன் அழைத்திட்டால்

அரங்கன் அழைத்திட்டால் இனியொரு வினையில்லை
அவனருள் கிடைத்திட்டால் கவலைகள் இனியில்லை
திருவருள் இருந்தால்தான் தரிசனம் சித்திக்கும்
தரிசனம் கிடைத்தாலே நம்வாழ்க்கைத் தித்திக்கும்

ஸ்ரீரங்கம் என்றாலே  நம்மனம் துள்ளிடுமே
ஸ்ரீரங்கன் லாவண்யம் இதயம் அள்ளிடுமே
ஸ்ரீபாதம் தமைபிடித்த ஸ்ரீமதியைப் பார்த்து
சற்றே எழுந்திருக்க நம்மனம் சொல்லிடுமே

(அரங்கன் அழைத்திட்டால் )

தெய்வீக அழகினிலே நம்மனம் லயித்திடுமே
லௌகீக விஷயார்த்தம் ஒருபுறம் வைத்திடுமே
பைந்நாக பாய்விரித்து பரமனையே சுமந்திருக்கும்
பாம்பணைக் கண்டு பொறாமைத் துளிர்த்திடுமே

(அரங்கன் அழைத்திட்டால் )

Wednesday, April 23, 2014

Vishnu - தனிக்கவிதை 1

இதயம் கருவறையாம் உடலம் ஆலயமாம்
உள்ள புலனைந்தும் ஒளிரும் திருவிளக்காம் 
இதழ்கள் கோபுரமாம் இலக்குமி பதியவன் 
பதநிழல் நின்றார்க்கு பார்க்குமிடம் பரமபதம் 

Thursday, April 17, 2014

Parvati - ஆதார ஸ்ருதி

பல்லவி

ஆதார ஸ்ருதியிங்கு நீயே என்னை
அன்புடன் ஆதரிப்பாயே
நீதானே கதியென்று வந்தேன் – நங்கை
நல்லூரை ஆளுமென் தாயே

(ஆதார ஸ்ருதியிங்கு)

சரணம் 1

நாதத்தின் வடிவென்று சொல்ல – உன்னை
வேதத்தின்  முடிவென்றுஞ் சொல்ல
ஞானமோ எனக்கொன்று மில்லை – உன்
நாமந்தான் என்தவத்தின் எல்லை

(ஆதார ஸ்ருதியிங்கு)

சரணம் 2

கொண்டதே கோலமென்றிருக்கும் – இந்தக்
கடையவன் வாழ்வென்று சிறக்கும்
பண்டிதர் வழியொன்று மறியேன் – தமிழ்ப்
பாட்டன்றி வேறொன்று மறியேன்

(ஆதார ஸ்ருதியிங்கு)


Sunday, April 6, 2014

Rama - இராம கீதை


பல்லவி

கடவுளரில் உன்னைப் போன்ற கடவுளில்லை
கதையேதும் உன்னுடைய கதை போலில்லை
விடையில்லாக் கேள்விகட்கு விடையாகினாய்
வினைப்பயனும் எமைத்தாக்க தடையாகினாய் 


சரணம் 1

பத்து அவதாரங்களில்  ஒன்றாகினாய்
மற்றவற்றை தாண்டிமிக நன்றாகினாய்
எத்தனை பாவங்கள் எமைச் சூழினும்
இங்கு எமைச் சூழினும்
ஒருமுறையுன் பேருரைக்க அதுவோடிடும்
விலகி அதுவோடிடும்

சரணம் 2

ஒற்றைச்சொல், பாணமில்லாள் என்றுலகில்
உனக்கென ஒருபாதை நீவகுத்தாய்
அத்தனே உன் வாழ்க்கை ஒரு பாடமே
நல்ல தொருபாடமே
உனைப்போல வாழ்ந்திடவே மனம் நாடுமே

எந்தன் மனம் நாடுமே

Tuesday, April 1, 2014

Vishnu - கடன் தீர்க்கும் கருணை

வானவர் வேண்டுதல் வெற்றியில் முடிய
தூண்பிளந்து தோன்றிய தெய்வமே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

இலக்குமியை  இடப்பாகம் இருத்தினாய் போற்றி
மலரடி பணிந்தார்க்கு வரமருள்வாய் போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

அரக்கன் குடல்கிழித்து  அன்பரைக் காக்க
கரங்களில் ஆயுதம் கொண்டவனே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

அனைத்து விடங்களும் அழித்து பவவினை
நினைத்ததும் அறுக்கும் நாரணனே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

சிங்க நாதத்தால் எண்திசை காவல்திக்க
ஜங்களின் பயம்போக்கி காத்திடுவோய் போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

பிரகலாதனை காக்க இரணியனை வதைத்த
திருமகளின் தெய்வமே திருமாலே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

கிரகங்களின் பிடியிலே கலங்கிடும் பக்தர்களை
அரவணைத்து பயம்நீக்கும் அன்னையே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி 

பிரமனும் ருத்திரனும் புகழ்ந்து பணிந்திடும்
மறைகளின் முடிவான சத்தியமே போற்றி
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி

கடன்தீர இப்பாட்டை கவனமுடன் படிப்போரின்
கடந்தீர்ந்து செல்வம் குவிந்திடவே அருள்வாயே 
ஈடிலா வீரனே வீரநர சிங்கனே
கடன்தீர்த்து காக்கும் கருணையேப் போற்றி 

Vishnu - திருக்கச்சி உறைகின்ற தேவா!


வெம்பாசக் குளிர்நீக்கும் வெயிலாக வந்திடவே
உம்பாதம் பணிந்தேனே அலைமகள் பெம்மானே
குருராமானுசன் கேள்வி களுக்கு விடையளித்த
திருக்கச்சி உறைகின்ற தேவா

உணர்த்திடில் உணர்வேன் அன்றிநான் அயர்வேன்
பிணக்கு வேண்டாம்  பிள்ளையிடம் - இணங்கியே
தருவாயே எனக்குமே திருவருளால் மறுவாழ்வு
திருக்கச்சி உறைகின்ற தேவா

கன்னியர்கள் கட்டழகில் காமுற்றே உன்னை
எண்ணாத தற்காயித் தண்டனை? கண்ணனே
கருணா நிதியேவென் கற்பகமே கடவுளே
திருக்கச்சி யுறைகின்ற தேவா

இன்றளவும் என்னையும் என்பாவமுஞ் சகித்தாய்
இன்றுஏன் சலிப்புனக்கு இயம்பு? உன்னைவிட
பரிவோடு பிள்ளைகளை பாலிப்பார் இங்குண்டோ
திருக்கச்சி யுறைகின்ற தேவா

எப்போதென் ஆசைகள் விட்டேறு வேன்நான் 
எப்போதுன் அடிசுகம் எய்துவேன்? அப்பனே
திருவடி நான்பிடித்தேன் தப்பியோ டாவண்ணம்
திருக்கச்சி யுறைகின்ற தேவா

உன்னைப் பாடாத ஒருதமிழ் எனக்கெதற்கு
நின்னையே பணிந்தேன் நாரணா - என்னை
கருவறையில் மீண்டும் கடுஞ்சிறை வைக்காதே
திருக்கச்சி யுறைகின்ற தேவா

இறப்பும் பிறப்பும் வெறுத்தேன் இனிநான்
மறந்தும் பிறவாத வரந்தா - மறைகளும்
இருவரும் தேடுகின்ற எட்டாத ஞானமே
திருக்கச்சி யுறைகின்ற தேவா

ஆறுதல் சொல்வார் யாருமிலை இங்கெனக்கு
ஈரைந்து அவதார அயர்ச்சியிலே - சீறுமொரு
அரவணையில் கண்மூடி உறங்கிட லாமோநீ

திருக்கச்சி உறைகின்ற தேவா

Shiva - மாசு படர்ந்த மனம்

மாசு படர்ந்த மனதுடன் கோவில்
வாசலில் எப்படி வருவேன்
ஈசனே எந்தன் பரமேஸ் வரனே
எனக்கொரு வழிநீ தருவாய்

மண்ணில் தூய மனதுடன் தானே
என்னை நீயும் படைத்தாய்
எண்ணங் களையே காம மென்னும்
அழுக்கால் நானும் கெடுத்தேன்
பண்டு தொட்டு படர்ந்த மாசை
பரமனே எப்படி துடைப்பேன்?

இன்தமிழ் தந்த உந்தன் பெயரை
என்தமிழ் என்று பாடிடுமோ?
நன்மை பயக்கும் நாதனுன் பதங்கள்
நெஞ்சம் என்று நாடிடுமோ?
என்னுயிர் பிரியும் பொழுதி லாவது
இத்தவம் எனக்கு கூடிடுமோ?

கோவில் நீகொண்ட இடங்களில் எந்தன்
கால்கள் அழைத்துச் சென்றதில்லை
தேவனுன் சன்னதி ஆணவம் ஒழிந்து
தலையும் தாழ்ந்து நின்றதில்லை
காவலனே நீ கைவிட்டா யெனில்
கதியோ எனக்கு என்றுமில்லை







Iyappan - ஸ்வாமியுன் சரணம்

ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்
பாடலைக் கேட்டுஎன் முன்னே வரணும்  
ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்
பாவிஎ னக்குந்தன் அருளைத் தரணும் 

வன்புலி ஏறி வந்திடுவாயே
உன்தரிசனம் நீ தந்திடுவாயே (2)

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)

பொன்னில் ஆசை கொண்டுழன் றிருக்கும்
என்னை நாடிய என்னுயிர் ஐயப்பா
உன்னை நாடியே உய்ந்திடவே நான்
உன்னடி நிழலில் என்னைநீ வையப்பா

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)

காணும் கண்ணை கருத்தை யள்ளும்
கூடிய வினைப்பயன் களைந்தே காக்கும் 
பூணும் கோலத்தை பார்த்திட வேஎனை
பதினெட்டு படியே ற்றிடுவாய் ஐயப்பா

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)

செம்பொன் மேனிச் செழுஞ்சுடரே என்
துன்பங்கள் நீங்க வரமருள் ஸ்வாமி
நம்பியே வந்தேன் நானும் உனையே
நிலைமை தெரிந்து காத்திடு எனையே

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)

நெஞ்சகக் கோவிலிலில் உனை வைத்தேனே  
நித்தமும் உன்னடி நான் பூசித்தேன்
தஞ்சம் என்றுன்னடி பணிந்தே நான்
தலைவிதி மாற்ற உனையா சித்தேன்

(ஸ்வாமியுன் சரணம் சரணம் சரணம்)



Iyappan - ஹரிஹர னென்றாலும்.....

ஹரிஹர னென்றாலும் ஐயப்ப னென்றாலும்
அய்யனே  நீ வருவாய் நான்
ஹரிஹர னென்றாலும் ஐயப்ப னென்றாலும்
அய்யனே  நீ வருவாய் 

ஆதியே நானுந்தன் அடைக்கல மானேன் (3)

ஏதுமே செய்தெனை அய்யனே காப்பாய் (2)

ஹரிஹர னென்றாலும் ஐயப்ப னென்றாலும்
அய்யனே  நீ வருவாய்

கண்களு முன்னுரு கண்டிட வேண்டும்(2)
கைகளு முன்னடி தொழுதிட வேண்டும் (2)

பண்தமிழ் பாடல்கள் பாடிட வேண்டும் (2)
பாதநிழல் மனம் நாடிட வேண்டும் (2)

ஹரிஹர னென்றாலும் ஐயப்ப னென்றாலும்
அய்யனே  நீ வருவாய் (4)

(கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் மெட்டு)