Tuesday, April 1, 2014

Vishnu - திருக்கச்சி உறைகின்ற தேவா!


வெம்பாசக் குளிர்நீக்கும் வெயிலாக வந்திடவே
உம்பாதம் பணிந்தேனே அலைமகள் பெம்மானே
குருராமானுசன் கேள்வி களுக்கு விடையளித்த
திருக்கச்சி உறைகின்ற தேவா

உணர்த்திடில் உணர்வேன் அன்றிநான் அயர்வேன்
பிணக்கு வேண்டாம்  பிள்ளையிடம் - இணங்கியே
தருவாயே எனக்குமே திருவருளால் மறுவாழ்வு
திருக்கச்சி உறைகின்ற தேவா

கன்னியர்கள் கட்டழகில் காமுற்றே உன்னை
எண்ணாத தற்காயித் தண்டனை? கண்ணனே
கருணா நிதியேவென் கற்பகமே கடவுளே
திருக்கச்சி யுறைகின்ற தேவா

இன்றளவும் என்னையும் என்பாவமுஞ் சகித்தாய்
இன்றுஏன் சலிப்புனக்கு இயம்பு? உன்னைவிட
பரிவோடு பிள்ளைகளை பாலிப்பார் இங்குண்டோ
திருக்கச்சி யுறைகின்ற தேவா

எப்போதென் ஆசைகள் விட்டேறு வேன்நான் 
எப்போதுன் அடிசுகம் எய்துவேன்? அப்பனே
திருவடி நான்பிடித்தேன் தப்பியோ டாவண்ணம்
திருக்கச்சி யுறைகின்ற தேவா

உன்னைப் பாடாத ஒருதமிழ் எனக்கெதற்கு
நின்னையே பணிந்தேன் நாரணா - என்னை
கருவறையில் மீண்டும் கடுஞ்சிறை வைக்காதே
திருக்கச்சி யுறைகின்ற தேவா

இறப்பும் பிறப்பும் வெறுத்தேன் இனிநான்
மறந்தும் பிறவாத வரந்தா - மறைகளும்
இருவரும் தேடுகின்ற எட்டாத ஞானமே
திருக்கச்சி யுறைகின்ற தேவா

ஆறுதல் சொல்வார் யாருமிலை இங்கெனக்கு
ஈரைந்து அவதார அயர்ச்சியிலே - சீறுமொரு
அரவணையில் கண்மூடி உறங்கிட லாமோநீ

திருக்கச்சி உறைகின்ற தேவா

No comments:

Post a Comment