Friday, December 27, 2013

Vishnu - ஆழ்வார்க்கு அடியேன்

பிரபந்தத்தின் முதல்நூறை பாசமோ டருளிய
பரந்தாமன் கைச்சங்கம் பொய்கைக்கு அடியேன்

கவுமோதகி அம்சமாய் கடல்மல்லை தலத்தில் 
அவதரித்த பூதத்து ஆழ்வாருக்கு அடியேன்

கரம்கொண்ட நந்தகமே கவிபாட பிறந்ததுவோ?
திருமயிலை பேயாழ்வார் திருவடிகளுக் கடியேன்

தொழுதவர் துயர்போக்கும் சுதர்சனத் திருவுருவம்
மழிசை ஆழ்வாரின் மலரடிக்கு அடியேன்

அருமறைச் சாரமாய் ஆயிரத்து நூற்றிரண்டு
திருவாய் மொழிதந்த நம்மாழ் வார்க்கடியேன் 

கண்ணிநுண் சிறுத்தாம்பை காதினிக்கும் தமிழில்
பண்பாடிய மதுரகவி ஆழ்வாருக்கு அடியேன்

மாலவன் திருமார்பம ஆடிடும்  கௌஸ்துப
மாலையின் அம்சமாம் குலசேகரர்க் கடியேன்

பரமனைத் தாங்கியே பறந்திடும் பெரிய
திருவடிகள் அம்சமாம் பெரியவர்க் கடியேன்

திருப்பாவை சொன்னாள் ஒருபாவை அவள்
திருவடித் தாமரைக்கு என்றும்நான் அடியேன்

அண்டிய வினைநீக்கும் அருந்தமிழ் பா சொன்ன
தொண்ட ரடிப்பொடி திருவடிகளுக் கடியேன்

திருமாலின் திருமார்ப மருவான ஸ்ரீவத்ச
உருவான திருப்பாணர் ஆழ்வார்க்கு அடியேன்

கூறுதற் கரியதாம் குணங்கள் தான்கொண்ட

சார்ங்கத்தின் உருவான திருமங்கைக்கு அடியேன்  

No comments:

Post a Comment